தூத்துக்குடி மாநகராட்சி அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு உணவு முறையாக வழங்கப்படுகிறதா?: கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சி அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு உணவு முறையாக வழங்கப்படுகிறதா? என்று கண்காணிப்பு அலுவலர் சிஜிதாமஸ் வைத்யன் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியிலுள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு முறையாக உணவு வழங்கப்படுகிறதா? ணன மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிஜிதாமஸ் வைத்யன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலுவலராக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனர் சிஜி தாமஸ் வைத்யன் தமிழக அரசால் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் நேற்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தார். அவர் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலையில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அவர் தூத்துக்குடி மாநகராட்சி வரதராஜபுரம் அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் முறையாக வழங்கப்படுகிறதா? இதன் மூலம் குழந்தைகளின் உயரம் மற்றும் எடை சரியாக உள்ளதா? என்று ஆய்வு செய்தார். ரகுமத்துல்லாபுரம் அங்கன்வாடி மையம், போல்டன்புரம் கக்கன்பூங்கா அருகில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் அரசு கல்லூரி மாணவர் விடுதி, தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தமிழ்நாடு அரசு மருத்துவப் பணிகள் கழகம் மாவட்ட மருத்துவக் கிடங்கில் உள்ள மருந்துகளின் இருப்பு குறித்தும், காலாவதி மருந்துகள் உள்ளதா? என்பது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.ஜின்பேக்டரி ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெறும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு பாடம் கற்பிப்பதை பார்வையிட்டார்.
கலந்து கொண்டவர்கள்
ஆய்வின் போது, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் தி.சாருஸ்ரீ, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், துத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ் குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் கு.சிவக்குமார், தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரசுவதி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.