பொதுப்பணித்துறை மூலம் பழமையான பள்ளி கட்டிடங்களை இடிக்கும் பணி தீவிரம்-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

பொதுப்பணித்துறை மூலம் பழமையான பள்ளி கட்டிடங்களை இடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
ஊட்டி
பொதுப்பணித்துறை மூலம் பழமையான பள்ளி கட்டிடங்களை இடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
அமைச்சர் ஆய்வு
நீலகிரி மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வந்து உள்ளார். இதன்படி நேற்று முன்தினம் மாலை ஊட்டி வந்த அவர் நேற்று கூடலூர் கல்வி மாவட்டம் பொக்காபுரம் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி, மசினகுடி அரசு மேல்நிலைப்பள்ளி, வாழைத்தோட்டம் ஜி.ஆர்.ஜி. பழங்குடியினர் பள்ளிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின்னர் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சென்றார்.
இதையடுத்து 100 ஆண்டுகளைக் கடந்து இயங்கி வரும் ஊட்டி பிரீக்ஸ் பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டு மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார்.இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நிதி ஒதுக்கீடு
தமிழகத்தில் பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நமது முதல்-அமைச்சர் நிதியை வாரி வழங்குகிறார். இதன்படி பள்ளி கல்வித்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.7000 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது நடந்த சட்டசபை கூட்டத்தொடரிலும், பள்ளி கல்வித்துறைக்கு ரூ.1050 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிதி அனைத்தும் முறையாக பள்ளிகளுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்யவும் பள்ளிகளுக்கான தேவைகளை அறியவும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.
தகுதி தேர்வில் ஆசிரியர்கள் தேர்ச்சி
முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் 234 தொகுதிகளுக்கும் நேரில் சென்று பள்ளிகளை ஆய்வு செய்து வருகிறோம். நூலகம், வகுப்பறை, கல்வித்துறை அலுவலகம் என 77 வகையான ஆய்வுகள் உள்ளன. ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தால் பள்ளிகளின் கள நிலவரத்தை தெரிந்து கொள்ள முடியாது என்பதற்காகவே இந்த கள ஆய்வு நடத்தப்படுகிறது. குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பள்ளி மற்றும் மேட்டுப்பாளையம் பள்ளியை ஆய்வு செய்ய உள்ளேன்.
பொதுப்பணித்துறை மூலம் பழமையான பள்ளி கட்டிடங்களை இடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆசிரியர்கள் பணியிடங்கள் ஆசிரியர் தகுதி தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுகிறது. தற்போது, முதல்-அமைச்சர் 3,200 முதுநிலை ஆசிரியர்களுக்கு பணியாணை வழங்கியுள்ளார். தகுதி தேர்வில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. இதனால், சீனியர் ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதுகுறித்து அரசு தரப்பில் கோர்ட்டில் வேண்டுக்கோள் விடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.