சென்னிமலை முருகன் கோவிலுக்கு, படிக்கட்டுகள் வழியாகதிருமஞ்சனம் கொண்டு செல்ல புதிய காளை மாட்டுக்கு பயிற்சி
சென்னிமலை முருகன் கோவிலுக்கு படிக்கட்டுகள் வழியாக திருமஞ்சனம் கொண்டு செல்ல புதிய காளை மாட்டுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னிமலை
சென்னிமலை முருகன் கோவிலுக்கு படிக்கட்டுகள் வழியாக திருமஞ்சனம் கொண்டு செல்ல புதிய காளை மாட்டுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னிமலை முருகன்
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் மலை மீது பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலை 7 மணிக்கு விளா பூஜை, காலை 8 மணிக்கு சந்தி பூஜை, மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 5 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7 மணிக்கு ராக்கால பூஜை, 8 மணிக்கு அர்த்தசாம பூஜை என தினமும் 6 கால பூஜை நடைபெறுகிறது.
இந்த கோவிலுக்கு படிக்கட்டுகள் வழியாகவும், மலைப்பாதை வழியாகவும் பக்தர்கள் சென்று சாமியை தரிசனம் செய்து வருகிறார்கள். இதற்காக கோவிலுக்கு செல்ல 1,320 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் பக்தர்கள் வசதிக்காக மலைப்பாதையில் கோவில் நிர்வாகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் மலைப்பாதை வழியாக கோவிலுக்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
படிக்கட்டுகள் வழியாக...
கோவிலில் காலை 8 மணிக்கு நடைபெறும் பூஜைக்கு தினமும் மலை அடிவாரத்தில் உள்ள கோவிலுக்கு சொந்தமான கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து காளை மாடு மூலம் 1,320 படிக்கட்டுகள் வழியாக திருமஞ்சனம் கொண்டு சென்று பூஜை செய்யப்படுவது வழக்கம். 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பழக்கம் இருந்து வருகிறது.
இதற்காக அடிவாரத்தில் உள்ள கோசாலையில் 3 காளை மாடுகள் கால்நடை உதவி டாக்டரின் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
பயிற்சி
வயது முதிர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக திருமஞ்சனம் கொண்டு சென்ற காளை மாடு படிக்கட்டுகளில் ஏறி செல்ல சிரமப்பட்டு வருகிறது.
இதனால் பக்தர் ஒருவர் மூலம் காணிக்கையாக வழங்கப்பட்ட மற்றொரு காளைக்கு தற்போது படிக்கட்டுகளில் திருமஞ்சனம் கொண்டு செல்லும் காளையுடன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய காளையும் 3 மாதங்களில் படிக்கட்டுகளில் சுலபமாக செல்ல பயிற்சி பெற்று விடும் என கோவில் பணியாளர்கள் தெரிவித்தனர்.