சாத்தான்குளம் அருகே தோட்டத்தை அபகரிக்க தம்பதிக்கு கொலை மிரட்டல்

சாத்தான்குளம் அருகே தோட்டத்தை அபகரிக்க தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே போலியாக ஆவணம் தயாரித்து தோட்டத்தை அபகரிக்க தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த அண்ணன், தம்பி உட்பட 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
போலி ஆவணம்
கடலூர் மாவட்டம் நெய்வேலி அம்பேத்கர் சாலை தெருவைச் சேர்ந்த செய்யது ரபிக் மனைவி தில்ஷத்பேகம் (வயது 54). இவர் சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்குடியைச் சேர்ந்த அகஸ்டின் ஜெபராஜ் என்பவரிடம கடந்த 2017-ஆம் ஆண்டு 10.46 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் அந்த இடம் தங்களுக்கு பாத்தியப்பட்டது என கூறி அமுதுண்ணாக்குடியைச் சேர்ந்த பரமசிவம் என்ற செல்லையா மகன் துரை என்ற சந்திரன் என்பவர், தான் அகஸ்டினிடம் பத்திர பதிவு செய்ததாக கூறியுள்ளார். மேலும் இதற்காக போலியாக ஆவணம் தயார் செய்து தோட்டத்தை அபகரிக்கும் நோக்கில் தில்ஷத்பேகத்திடம் பிரச்சினை செய்து வந்துள்ளார்.
கொலை மிரட்டல்
இந்நிலையில் கடந்த 3-ந்தேதி தில்ஷத் பேகம் தோட்டத்திற்கு முன்பு தனது கணவருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பரமசிவம் மகன்கள் அருணாச்சலம், துரை மற்றும் போலி ஆவணத்துக்கு சாட்சியாக சாத்தான்குளத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் ராஜகோபால், தாமரை மொழியை சேர்ந்த மாசானம் மகன் கருப்பசாமி ஆகியோர் நிலம் தொடர்பாக தில்ஷத்பேகம் மற்றும் அவரது கணவரை அவதூறாக பேசி கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனராம்.
4 பேருக்கு வலைவீச்சு
இதுகுறித்து தில்ஷத் பேகம் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எபநேசர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, தலைமறைவாக உள்ள அருணாச்சலம், துரை, ராஜகோபால் கருப்பசாமி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடிவருகின்றனர்.