வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை தொடர்ந்து சரிவு

வரத்து அதிகரிப்பு, விற்பனை மந்தம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. விற்பனை இல்லாததால், மொத்த விற்பனையாளர்கள் அதை குப்பையில் கொட்டும் அவலமும் நடக்கிறது.
சென்னை,
'விண்ணை முட்டும் விலையில் தக்காளி', 'ராக்கெட் வேகத்தில் உயரும் தக்காளி விலை', 'தக்காளி விலை 'கிடு கிடு' உயர்வு' இது கடந்த மே மாதத்தில் செய்திகளில் வலம் வந்த வார்த்தைகள். தக்காளி வரத்து குறைந்து போனதால் ஏற்பட்ட விளைவு காரணமாக அந்த அளவுக்கு அதன் விலை எகிறி இருந்தது.
அப்போது சென்னை கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் கூட ஒரு கிலோ தக்காளி ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. ஏழை-எளிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு அதன் விலை இருந்தது. இதனை சரிசெய்ய தமிழ்நாடு அரசு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.76-க்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
விலை அதிகமாக இருந்ததால், கிலோ கணக்கில் வாங்கியவர்கள் கிராம் அளவில் வாங்கி சிக்கனமாக பயன்படுத்தினர். கடந்த 2 மாத இடைவெளியில் அந்த நிலையில் அப்படியே தலைகீழாக மாறி, கோபுரத்தில் இருந்த தக்காளி இப்போது குப்பை மேட்டுக்கு வந்து இருக்கிறது.
விலை சரிவு
கடந்த மே மாதத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு, பின்னர் வரத்து சற்று அதிகரித்ததும், கடந்த ஜூன் மாதத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.25 முதல் ரூ.40 வரை விற்பனை ஆனது. இந்த மாத தொடக்கத்தில் அது குறைந்து, ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.20 என்ற நிலையில் மொத்த மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டது.
தற்போது கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் விளைச்சல் அதிகரிப்பால், அதன் வரத்தும் அதிகரித்து இருக்கிறது. கடந்த 10 நாட்களாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 80 முதல் 90 லாரிகளில் தக்காளி வரத்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
வரத்து அதிகரித்து இருப்பதால், அதன் விலையும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. அதன்படி, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.5 முதல் ரூ.11 வரையில் விற்பனை ஆனது. வரத்து அதிகமாக இருந்தாலும் விற்பனை இல்லாததால், வாங்கி வைக்கும் தக்காளியை மறுநாள் வரை பாதுகாத்து வைக்க முடியாததாலும், அவ்வாறு வைத்த தக்காளி அழுகியதாலும் மொத்த விற்பனையாளர்கள் குப்பையில் கொட்டும் அவலமும் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வருத்தத்தோடு கூறுகின்றனர்.
விற்பனை மந்தம்
தக்காளி தான் விலை சரிந்து வருகிறது என்றால், மற்ற காய்கறி வரத்தும் அதிகரித்து, அதன் விலையும் குறைந்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது. தற்போது ஆடி மாதமாக இருப்பதால், இந்த காலத்தில் சுப நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காது என்பதால், விற்பனை மந்தமாகவே இருக்கிறது என்றும், இதன் காரணமாக காய்கறி விலை சரிந்து வருகிறது என்றும், ஆடி மாதம் முடியும் வரை காய்கறி விலை இதே நிலையில்தான் நீடிக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.