தக்காளிக்கு தாங்கு குச்சிகள் அமைக்க பழையமுறையில் மானியத்தொகை வழங்கவேண்டும்


தக்காளிக்கு தாங்கு குச்சிகள் அமைக்க பழையமுறையில் மானியத்தொகை வழங்கவேண்டும்
x
திருப்பூர்


தக்காளி சாகுபடியில் தாங்கு குச்சிகள் அமைக்க பழைய முறையிலேயே மானியத்தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழைக்காலம்

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காய்கறிகள் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தக்காளி சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. தக்காளி சாகுபடியில் விவசாயிகள் மழைக்காலங்களில் மகசூல் இழப்பை சந்திக்கும் நிலை உள்ளது.இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தாங்கு குச்சிகள் அமைத்து அதில் தக்காளியை படரவிடும் முறை விவசாயிகளுக்கு கைகொடுக்கிறது.கடந்த காலங்களில் இவ்வாறு தாங்கு குச்சிகளை அமைக்க விவசாயிகளுக்கு மானியத்தொகை வழங்கப்பட்டு வந்தநிலையில் தற்போது இந்த திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

தக்காளி சாகுபடியைப் பொறுத்தவரை மழைக்காலம் என்பது சவாலான காலமாகவே உள்ளது.தற்போது பெரும்பாலான விவசாயிகள் வீரிய ஒட்டு ரக தக்காளியையே சாகுபடி செய்கின்றனர்.இந்த ரகங்கள் கொடி போல கிளைத்து வளர்வதுடன் அதிக காய் பிடிப்புத்திறனும் கொண்டதாக உள்ளது. இந்த கொடிகள் மழைக்காலங்களில் சேற்றில் சிக்கும்போது பூக்கள், பிஞ்சுகள், காய்கள், பழங்கள் என அனைத்துமே சேதமடைகிறது. இதனால் பெருமளவு மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

இடுபொருட்கள்

இதனைத் தவிர்க்கும் விதமாக தாங்கு குச்சிகள் அமைத்து, சணல் கயிற்றின் உதவியுடன் தக்காளி கொடிகள் மண்ணில் படாமல் தூக்கி கட்டி விடுவோம். இந்த முறை மிகச்சிறந்த பலன் கொடுக்கிறது. மழைக்காலங்களில் சேதமடைவது தவிர்க்கப்படுவதுடன் நல்ல காற்றோட்டம், சூரிய ஒளி கிடைப்பதால் மகசூலும் அதிகரிக்கிறது. பின் கருகல் உள்ளிட்ட நோய்த்தாக்குதல்களும் கட்டுப்படுத்தப்படுகிறது. இவ்வாறு தாங்கு குச்சிகள் அமைப்பதற்கு தமிழ்நாடு ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித்திட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் மூலம் மானியம் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டில் உடுமலை வட்டாரத்துக்கு 250 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது.

ஒரு விவசாயிக்கு அதிக பட்சமாக 5 ஏக்கர் வரை மானியம் வழங்கப்பட்டதுடன், அந்த தொகை விவசாயியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் வாழைக்கு முட்டு கொடுத்தல், பந்தல் காய்கறிகள் சாகுபடியில் தற்காலிக பந்தல் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளவும் இந்த திட்டத்தில் வகை செய்யப்பட்டிருந்தது. இது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் நடப்பு ஆண்டில் இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு தாங்கு குச்சிகள் அமைக்க வழங்கப்படும் பணத்துக்குப் பதிலாக உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.சில விவசாயிகள் இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.பல விவசாயிகள் ரசாயன இடுபொருட்களைப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு ஒவ்வொருவரின் சாகுபடி முறைகளும் மாறும் நிலையில் இடுபொருட்கள் வழங்குவதற்குப் பதிலாக மானியத் தொகை வழங்கப்பட்டால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவவாறு விவசாயிகள் கூறினர்.


Next Story