கொரோனா முடிந்து பழைய நிலைக்கு திரும்பியதால் சேலத்தில் பூக்களுடன் வியாபாரிகள் ஊர்வலம்

கொரோனா முடிந்து பழைய நிலைக்கு திரும்பியதால் சேலத்தில் பூக்களுடன் வியாபாரிகள் ஊர்வலம் நடத்தினர்.
சேலம் சின்னக்கடை வீதி அருகே பூ மார்க்கெட் உள்ளது. இங்கு ஏராளமான வியாபாரிகள் பூக்கள் வியாபாரம் செய்து வருகிறார்கள். கொரோனா தொற்று முடிந்து பூ வியாபாரம் பழைய நிலைக்கு திரும்பியதால் ஒரு டன் பூக்களுடன் ஊர்வலமாக வந்து ராஜகணபதி கோவில் மற்றும் சுகவனேசுவரர் கோவிலில் சிறப்பு பூஜையில் ஈடுபடுவது என்று பூ வியாபாரிகள் முடிவு செய்திருந்தனர்.
அதன்படி, சின்னக்கடை வீதியில் இருந்து நேற்று காலை ஏராளமான பூ வியாபாரிகள் கூடைகளில் பூக்களை வைத்துக்கொண்டு ஊர்வலமாக ராஜகணபதி கோவிலுக்கு வந்தனர். பின்னர் ராஜகணபதிக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து பூ வியாபாரிகள் தங்களது குடும்பத்தினருடன் பூக்கூடைகளை சுமந்தவாறு ஊர்வலமாக கமலா மருத்துவமனை, பட்டைக்கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில், டவுன் போலீஸ் நிலையம் வழியாக சுகவனேசுவரர் கோவிலுக்கு வந்தனர். இதையடுத்து மூலவருக்கு ஒரு டன் பூக்களால் புஷ்பாஞ்சலி செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் பூ வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.