கடலூரில் சோகம்: குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததில் 1½ வயது குழந்தை கருகி பலி தாத்தாவுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

கடலூரில் குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததில் 1½ வயது குழந்தை உடல் கருகி உயிரிழந்தது. படுகாயமடைந்த தாத்தாவுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர் முதுநகர்,
கடலூர் வண்டிப்பாளையம் கண்ணகி நகர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவருடைய மனைவி கலைச்செல்வி (வயது 25). இவர்களுக்கு 1½ வயதில் கவி வித்யா என்ற பெண் குழந்தை இருந்தது.
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதில் கலைச்செல்வி தனது குழந்தை மற்றும் தந்தை ராஜமாணிக்கத்துடன், அதே பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மதியம் கலைச்செல்வி, வீட்டில் சமையல் செய்வதற்காக விறகு அடுப்பை பற்ற வைத்தார். பின்னர் அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது அவர் குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு சென்றார். வீட்டில் ராஜமாணிக்கம் இருந்தார்.
தீப்பற்றி எரிந்த வீடு
சிறிது நேரத்தில் அடுப்பில் பற்றி எரிந்த தீ, வீட்டின் குடிசையில் எதிர்பாராதவிதமாக பரவியது. இதில் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. வயது முதிர்வின் காரணமாக ராஜமாணிக்கத்தால் உடனடியாக எழுந்து வரமுடியவில்லை.
வீடு தீப்பிடித்து எரிந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினா் விரைந்து வந்து வீட்டுக்குள் இருந்த ராஜமாணிக்கத்தை மட்டும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. வீட்டுக்குள் குழந்தை கவி வித்யா இருந்ததை யாரும் கவனிக்கவில்லை.
இதற்கிடையே கடைக்கு சென்றிருந்த கலைச்செல்வி, வீட்டிற்கு வந்தார். அப்போது தனது வீடு தீப்பற்றி எரிந்ததை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். மேலும் அவர் தனது குழந்தை உள்ளே தூங்கிக் கொண்டு இருப்பதாக கூறி கூச்சலிட்டு கதறி அழுதபடி உள்ளே செல்ல முயன்றார். ஆனால் அவரை அங்கிருந்தவர்கள் பிடித்து தடுத்து நிறுத்தினர்.
குழந்தை பலி
இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கவி வித்யா, உடல் கருகி வீட்டுக்குள் பிணமாக கிடந்தாள். மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சாம்பலாகின.
தான் பெற்ற குழந்தை தீயில் கருகி பிணமாக கிடப்பதை பார்த்த கலைச்செல்வி கதறி அழுதார். இது காண்போரின் நெஞ்சை கரைய வைப்பதாக இருந்தது. இதற்கிடையே தீக்காயமடைந்த ராஜமாணிக்கத்தை கடலூர் முதுநகர் போலீசார் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூரில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததில் 1½ வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.