அங்கக சான்று குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

வரக்கால்பட்டில் அங்கக சான்று குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) மற்றும் வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் சார்பில் கடலூர் அடுத்த வரக்கால்பட்டில் அங்ககச் சான்று குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதற்கு கடலூர் வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் தலைமை தாங்கி, விவசாயத்திற்கு அடிப்படையான மண்வளத்தை பேணி பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கி கூறினார். கடலூர் விதைச்சான்று உதவி இயக்குனர் பிரேமலதா, அங்கக வேளாண்மை குறித்தும், விவசாயிகள் அங்ககச் சான்று பெறும் முறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத்துறை அலுவலர் தெய்வநிதி, இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஒரு குழுவாக ஏற்படுத்தி அவர்களுக்கென சிறப்பு திட்டங்களை அளிக்க முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.
இந்த பயிற்சியில் பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் அங்கக இடுபொருட்கள் ஆகியவை காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதில் வேளாண்மை அலுவலர் ஜெயஸ்ரீ, கால்நடை மருத்துவர் பார்கவி, உதவி தோட்டக்கலை அலுவலர் பழனிச்சாமி, உதவி வேளாண்மை அலுவலர் சிவமணி, உதவி அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் அழகுமதி, வரக்கால்பட்டு கூட்டுறவு சங்க செயலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.