போலீஸ் நிலையத்தில் ரகளை; ராணுவ வீரர் மீது வழக்கு

போலீஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட ராணுவ வீரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குழித்துறை:
திருவட்டார் அருகே உள்ள திருவரம்பு தெங்குவிளையை சேர்ந்தவர் சாம்சன் (வயது43). உத்தரப்பிரதேசத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று சாம்சன் மார்த்தாண்டம் பம்மத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் நகை எடுக்க சென்றார். அப்போது அவர் அங்கு தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து நகைக்கடை மேலாளர் கணேஷ் (47) மார்த்தாண்டம் போலீசாருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார்.
போலீசார் அங்கு விரைந்து சென்று சாம்சனை பிடித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது அவர் போலீசாரிடம், 'என்னை எதற்காக அழைத்து வந்தீர்கள்' என்று கேட்டு தகராறு செய்தார். அத்துடன் போலீஸ் நிலையத்தில் இருந்த பெஞ்சை உடைத்து ரகளையில் ஈடுபட்டார். இதை தடுக்க முயன்ற ஏட்டு பினுவை தாக்க முயன்றதுடன், கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுதொடர்பாக சாம்சன் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர் பணியாற்றும் பகுதியில் ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததால் அது தொடர்பான சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.