திருநங்கையிடம் காரில் சில்மிஷம்:தட்டிக்கேட்ட போலீஸ்காரருடன் வாலிபர் வாக்குவாதம்
திருநங்கையிடம் காரில் சில்மிஷம் செய்ததை தட்டிக்கேட்ட போலீஸ்காரருடன் வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம்:
சேலம் 5 ரோடு பகுதியில் ஸ்டேட் வங்கி காலனியில் உள்ள வீடுகளில் திருநங்கைகள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். அங்கு இரவு நேரங்களில் சுற்றி வரும் சில திருநங்கைகளை தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது என போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்து விடுவார்கள்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள திருமண மண்டபம் முன்பு கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதில் இருந்த வாலிபர், உள்ளே திருநங்கையை வரவழைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர், அந்த வாலிபரை எச்சரித்து அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து அந்த வாலிபர் தனது காரில் சிறிது தூரம் சென்றார். பின்னர் அவர் தனது காரில் விரைந்து சென்று தன்னை அங்கிருந்து அனுப்பிய போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளை வழிமறித்தார். மேலும் அவரின் மோட்டார் சைக்கிள் சாவியை எடுத்துக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் தெரிந்ததும் கூடுதல் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அந்த வாலிபரை கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.