வீட்டின் முன்பு இருந்த மரம் வேரோடு வெட்டி சாய்ப்பு

வீட்டின் முன்பு இருந்த மரம் வேரோடு வெட்டி சாய்ப்பு
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மரங்களை வெட்டக்கூடாது என்றும், அதை மீறி வெட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பணிகளுக்காக மரத்தை வெட்டுவது என்றால் வருவாய்துறையினரிடம் முறையான அனுமதி பெற்ற பிறகே மரங்களை வெட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி 6-வது வார்டுக்குட்பட்ட தொட்டி மண்ணரையை அடுத்த ஜெய்கேந்திராநகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணதாஸ் என்பவரது வீட்டின் முன்பு இருந்த பெரிய வேப்பமரம் ஒன்று இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் அந்த மரத்தை வேரோடு வெட்டி சாய்த்துள்ளார். இதையடுத்து அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கிருஷ்ணதாஸ் நேற்று திருப்பூர் கோட்டாட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணனை சந்தித்து புகார் மனு கொடுத்தார். திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் கே.கதிரேசன் உடன் சென்றார்.