இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.45 லட்சம் பீடிஇலைகள் சிக்கியது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.45 லட்சம் மதிப்புள்ள பீடிஇலைகள் சிக்கியது. இதுதொடர்பாக மினி லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
எட்டயபுரம்:
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.45 லட்சம் மதிப்புள்ள பீடிஇலைகள் சிக்கியது. இதுதொடர்பாக மினி லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கடத்தல் சம்பவம்
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், பீடி இலை கடத்தலும் அதிகரித்து உள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் தொடர்ச்சியாக கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
ரகசிய தகவல்
இந்த நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள வேம்பார் கடலோர எல்லைக்குட்பட்ட பெரியசாமிபுரம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும துணை ேபாலீஸ் சூப்பிரண்டு பிரதாபன் உத்தரவின் பேரில் வேம்பார் கடலோர காவல் படை போலீசார் கடலோர பகுதியில் சோதனை செய்தனர்.
அப்போது, அங்கு சந்தேகிக்கும் வகையில் ஒரு மினி லாரி நின்று கொண்டு இருந்தது. அதை கடலோர காவல் படை போலீசார் ேசாதனை செய்தனர்.
1½ டன் பீடிஇலைகள்
அந்த மினி லாரியில் ஏராளமான பண்டல்கள் அடுக்கிவைக்கப்பட்டு இருந்தது. அவற்றை பிரித்து பார்த்த போது பீடி இலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 43 பண்டல்களில் 1½ டன் பீடி இலைகள் இருந்தது. இந்த பீடி இலைகள் படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மினி லாரி டிரைவரான தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயராம் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் பீடி இலைகள், மின லாரி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
ரூ.45 லட்சம் மதிப்பு
பிடிபட்ட பீடி இலைகளின் இலங்கை மதிப்பு சுமார் ரூ.45 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.