ஓய்வூதியம் பெறும் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆயுள் சான்றினை இணையவழியில் சமர்ப்பிக்கலாம் அதிகாரி தகவல்


ஓய்வூதியம் பெறும் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆயுள் சான்றினை இணையவழியில் சமர்ப்பிக்கலாம் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 6 April 2023 12:15 AM IST (Updated: 6 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறும் அமைப்புசாரா தொழிலாளர்கள், தங்களது ஆயுள் சான்றினை இணையவழியில் சமர்ப்பிக்கலாம் என அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடலூர்

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையின் கீழ் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டம் அளிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அதில், பதிவு பெற்று 60 வயது நிறைவடைந்த தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் வருடந்தோறும் ஆயுள் சான்று சமர்ப்பித்த பின்னரே, தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கப்படும். தற்போது 2023-2024-ம் ஆண்டுக்கான ஆயுள் சான்றினை இணைய வழியில் சமர்ப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் தங்களது ஆயுள் சான்றினை https://tnuwwb.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் 'பென்ஷனர் லைப் சர்ட்டிபிகேட்' என்பதை தேர்வு செய்து தங்களது பதிவு எண் மற்றும் செல்போன் எண்ணை உள்ளீடு செய்து பெறப்படும் ஒருமுறை கடவுச்சொல்லை கொண்டு உள்சென்று, தங்களது சுயவிவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தடையின்றி ஓய்வூதியம்

மேலும் ஆதார் எண், குடும்ப அட்டை எண், ஓய்வூதிய ஆணை எண், வங்கி கணக்கு எண் போன்ற விவரங்களை உள்ளீடு செய்து, அந்த ஆவணங்களை அசலாக பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆயுள் சான்றினை தங்களது அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் செலுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே ஓய்வூதியதாரர்கள், தங்களது ஆயுள் சான்றினை உரிய காலத்தில் செலுத்தி தடையின்றி ஓய்வூதியம் பெறலாம்.

மேற்கண்ட தகவல் கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story