வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி கூட்டம்
வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி கூட்டம் நடந்தது
கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-
ராஜா கார்த்திகேயன் (அ.தி.மு.க):-பேரூராட்சி பகுதியில் இரண்டு இடங்களில் குடிநீர் தொட்டி அமைப்பதற்கு ரூ.14 லட்சம் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
செயல் அலுவலர்:-வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதியில் 2 இடங்களில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைப்பதற்கு உத்தேச திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. பூமியில் குறைவான அடியில் குடிநீர் கிடைத்தால் நிதி குறையும். இதில் தவறு நடக்க வாய்ப்பில்லை.
ஆக்கிரமிப்பு
கென்னடி (தி.மு.க):-வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
விந்தியாதேவி சுரேஷ் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி):- எனது வார்டு பகுதியில் கூடுதலாக குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும்.
கவிதா (தி.மு.க):- தட்டுப்பாடு இன்றி குடிநீர் வசதி செய்து தர வேண்டும்
சியாமளாதேவி (தி.மு.க):- ரெயில்வே ரோடு பகுதியில் கூடுதலாக தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும்.
துணைத் தலைவர்:-வைத்தீஸ்வரன் கோவில் நான்கு வீதிகளும் தேரோடும் வீதியாக உள்ளது. அடிக்கடி மின் இணைப்புகளை துண்டித்து தேரை இழுக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, நான்கு வீதிகளிலும் உள்ள மின்கம்பிகளை பூமிக்கு அடியில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைவருக்கும் குடிநீர்
தலைவர்:- நிதி நிலைமைக்கேற்ப வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். 2.0 திட்டத்தின் கீழ் சுமார் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.