வேதாரண்யேஸ்வரர் கோவிலில் வேதபாராயணம் நிகழ்ச்சி நிறைவு

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் வேதபாராயணம் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக உற்சவத்தையொட்டி வேத பண்டிதர்களால் மேற்கொள்ளப்பட்ட வேத பாராயண நிகழ்ச்சி நிறைவு அடைந்தது. நான்கு வேதங்கள் பூஜிக்கப்பட்டு புகழ்பெற்ற வேதாரண்யம் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவத்தில் நாள்தோறும் வேத பண்டிதர்கள் பாராயணத்துடன் மந்திரங்களைச் சொல்லி பூஜித்துக் கொண்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த மாதம் 16-ந்தேதி முதல் கொடி ஏற்றத்துடன் நடந்த மாசி மக உற்சவத்தில் ரிக் வேதமும், 25-ந் தேதி முதல் யஜூர் வேதமும், கடந்த 5-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை ஜாம வேதபாராயணமும் நடந்தது. நிறைவு நாளான நேற்று சன்னதி தெரு வேத பாடசாலையில் வைத்து வேதங்களை ஆவாகனம் செய்து வைக்கப்பட்ட கலசத்திற்கு பூஜைகள் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பிரபு கனபாடிகள் தலைமையிலான வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தை எடுத்து சென்று வேதாரண்யேஸ்வரர் கோவில் மணிகர்ணிகை குளத்தில் தீர்த்தவாரி செய்தனர்.