வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் மாணவர்களை அரை நிர்வாணமாக்கி 'ராக்கிங்' சீனியர் மாணவர்கள் 7 பேர் இடைநீக்கம்


வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் மாணவர்களை அரை நிர்வாணமாக்கி ராக்கிங் சீனியர் மாணவர்கள் 7 பேர் இடைநீக்கம்
x
தினத்தந்தி 9 Nov 2022 11:47 PM IST (Updated: 10 Nov 2022 11:02 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் சி.எம்.சி. மருத்துவக்கல்லூரி விடுதியில் மாணவர்களை அரை நிர்வாணமாக்கி ராக்கிங் செய்த 7 சீனியர் மாணவர்களை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

வேலூர்

வேலூர் சி.எம்.சி. மருத்துவக்கல்லூரி விடுதியில் மாணவர்களை அரை நிர்வாணமாக்கி ராக்கிங் செய்த 7 சீனியர் மாணவர்களை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

சி.எம்.சி. மருத்துவக்கல்லூரி

வேலூர் பாகாயத்தில் சி.எம்.சி. மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 400 மாணவ-மாணவிகள் பயின்று வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலான மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து மருத்துவம் பயில்கின்றனர். சி.எம்.சி. மருத்துக்கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ராக்கிங் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

அந்த வீடியோவில், மழைநேரத்தில் ஜூனியர் மாணவர்கள் சட்டை அணியாமல், அரை டவுசர் மட்டும் அணிந்து அரை நிர்வாணமாக விடுதியின் உள்வளாகத்தை சுற்றி நடந்து வருகிறார்கள். அப்போது சீனியர் மாணவர்கள் தண்ணீரை அவர்கள் மீது பீய்ச்சி அடிக்கிறார்கள். மேலும் சிலர் மீது முட்டையை வீசி ஆரவாரம் செய்கின்றனர். மழைநீர் தேங்கிய சேற்றில் அவர்களை குட்டிக்கரணம் அடிக்க வைத்து தண்டால் எடுக்கும்படி மிரட்டுகின்றனர். அதனை உடனடியாக செய்யாதவர்கள் மீது முட்டைகளை வீசுகிறார்கள். அதனால் ஜூனியர் மாணவர்கள் பயந்து சேற்றில் குட்டிக்கரணம் அடித்து எழுந்து செல்கிறார்கள். அவர்கள் கூறியபடி தண்டால் எடுக்கின்றனர்.

ராக்கிங் வீடியோ வைரல்

மேலும் ஒரு சீனியர் மாணவர் நடந்து வரும் 2 மாணவர்களை நிறுத்தி அவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க சொல்கிறார். அதன்படி அவர்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கின்றனர். ஆனால் அந்த முத்தம் சரியில்லை என்று கூறி மீண்டும் மீண்டும் அவர்களை முத்தம் கொடுக்க வைக்கின்றனர். இவ்வாறு ஜூனியர் மாணவர்களை கொடுமைப்படுத்தும் காட்சிகள் பதிவாகியிருந்தன. சுமார் ஒரு நிமிடம் 52 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ காட்சி பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வீடியோவை பாதிக்கப்பட்ட மாணவர்கள் சி.எம்.சி. மருத்துவக்கல்லூரி நிர்வாகத்துக்கும், டெல்லியில் உள்ள ராக்கிங் தடுப்பு பிரிவுக்கும் வீடியோ பதிவுடன் புகார் செய்ததாக கூறப்பட்டது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவக்கல்லூரி சீனியர் மாணவர்கள் 7 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

7 மாணவர்கள் இடைநீக்கம்

இதுகுறித்து சி.எம்.சி. மருத்துவமனை இயக்குனர் விக்ரம் மேத்யூஸ் கூறுகையில், மருத்துவக்கல்லூரி விடுதியில் ஜூனியர் மாணவர்களை ராக்கிங் செய்ததாக கல்லூரி நிர்வாகத்துக்கு பெயர், முகவரி இல்லாமல் கடந்த 6-ந் தேதி புகார் வந்தது. அதில், கல்லூரியில் படிக்கும் 7 சீனியர் மாணவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 7 பேரையும் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளோம்.

மேலும் இதனை விசாரிக்க ஒரு பேராசிரியர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளோம். இதுகுறித்து கல்லூரியில் உள்ள ராக்கிங் தடுப்பு குழுவும் விசாரித்து வருகிறது. பேராசிரியர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு விசாரித்து அறிக்கை அளிக்கப்பட்ட பின்னர் ராக்கிங் தடுப்புக்குழு மூலம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பேராசிரியர் தலைமையிலான குழுவினரின் அறிக்கை 2 அல்லது 3 நாளில் கிடைக்கும். தற்போது சமூகவலைதளத்தில் வெளியான வீடியோவை வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது. எங்கள் கல்லூரியில் ராக்கிங் என்பது சகித்து கொள்ள முடியாத ஒன்று. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

சி.எம்.சி. மருத்துவக்கல்லூரி ஜூனியர் மாணவர்கள் ராக்கிங் செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story