தூத்துக்குடியில், அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி


தூத்துக்குடியில், அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி
x
தினத்தந்தி 25 July 2023 6:45 PM GMT (Updated: 27 July 2023 11:07 AM GMT)

தூத்துக்குடியில், அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணியை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

வாக்குப்பதிவு எந்திரம்

தூத்துக்குடி மாவட்டத்தில், நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு சரிபார்க்கும் தணிக்கை எந்திரங்கள் ஆகியவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. இதில் 2 ஆயிரத்து 316 வாக்குப்பதிவு எந்திரங்கள், 4 ஆயிரத்து 671 வாக்குச்சீட்டு எந்திரம், 2 ஆயிரத்து 868 வி.வி.பேட் எந்திரம் ஆகியவை உள்ளன. இந்த எந்திரங்களில் முதல் கட்ட சரிபார்ப்பு பணி கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இந்த பணிகளை பெல்நிறுவன என்ஜினீயர்கள் மேற்கொண்டனர். இந்த பணிகள் வருகிற 28-ந் தேதியுடன் நிறைவடைய உள்ளன.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் நேற்று வாக்குப்பதிவு எந்திரம் சரிபார்ப்பு பணிகளை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது தனி மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) காமாட்சி கணேசன், தேர்தல் பிரிவு தாசில்தார் தில்லைப்பாண்டி, தனி தாசில்தார் (சிப்காட்) சந்திரன், அரசியல் கட்சி பிரதிநிதிகள் ரவி, ஆக்னல் பீரிஸ் (தி.மு.க.), சந்தானம் (அ.தி.மு.க.), சித்திரை (காங்கிரஸ்), சிவராமன் (பா.ஜனதா), டி.ராஜா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மாதிரி வாக்குப்பதிவு

மேலும் வருகிற 28-ந் தேதியுடன் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைவதால், 29-ந் தேதி காலை 9.30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இதில் 5 சதவீதம் எந்திரங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. இதில் ஒரு சதவீதம் எந்திரங்களில் 1,200 வாக்குகளும், 2 சதவீதம் எந்திரங்களில் 1,000 வாக்குகளும், 2 சதவீதம் எந்திரங்களில் 500 வாக்குகளும் பதிவு செய்து பரிசோதிக்கப்படுகிறது. அதன்பிறகு நல்ல நிலையில் உள்ள எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து பழுதடைந்த எந்திரஙகள் அனைத்தும் பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஒரு வாரத்துக்குள் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.


Next Story