மேலூர் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மேலூர் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலூர்,
மேலூர் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடை
மேலூர் அருகே கேசம்பட்டி ஊராட்சியில் உள்ளது சாணிபட்டி. இங்கு மேலூர்-நத்தம் சாலையோரம் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. வெளியிடங்களில் இருந்து இங்கு மது குடிக்க வருவோரினால் இப்பகுதியில் நகை பறிப்பு, அடிதடி என பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடந்துள்ளன. பொதுமக்களிடம் தகராறு செய்வது, கேலி, கிண்டல், ஆபாச வார்த்தைகளால் பேசுவது என குடிபோதையில் குடிமகன்கள் கலாட்டா செய்வது அதிகரித்து விட்டது.
எனவே இப்பகுதியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பள்ளி மாணவிகள், பெண்கள் பாதிக்கப்படுவதாக கேசம்பட்டி ஊராட்சி கிராமசபையில் தீர்மானமாக நிறைவேற்றி அரசு அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அதிகாரிகள் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மறியல்
இந்நிலையில் கேசம்பட்டி, கடுமிட்டான்பட்டி, அருக்கம்பட்டி, கற்பூரம்பட்டி, சாணிபட்டி உள்ளிட்ட சுற்றி உள்ள கிராமத்தை சேர்ந்த பெண்கள் சாணிபட்டியில் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்து நோட்டீசுகள் மூலம் அறிவிப்பு செய்தனர். அதன்படி சாணிபட்டியில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றுகூடினர். அங்கு நத்தம்-மேலூர் பிரதான சாலையில் கொளுத்தும் வெயிலில் சாலையில் உட்கார்ந்து கோஷமிட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த மேலவளவு போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் ஆகியோர் நடவடிக்கை எடுப்பதாக கூறி சமரசம் செய்தனர். டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் மீண்டும் போராட்டம் செய்யப்படும் என கூறி தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.