தூத்துக்குடியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு:நகர்ப்புற திட்டக்குழுவுக்கு 5 உறுப்பினர்கள் தேர்வு


தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 24 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நடந்த நகர்ப்புற திட்டக்குழுவுக்கு 5 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஊரகப்புறத்திற்கு ஏழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நேற்று திட்டமிடும் குழுவுக்கு நடந்த தேர்தலில் 5 நகர்ப்புற திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஊரகப்பகுதிக்கு 7 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஊரகப்பகுதிக்கு போட்டியின்றி தேர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ஊரக பகுதிக்கு 7 உறுப்பினர்களும், நகரப்பகுதிக்கு 5 உறுப்பினர்களும் ஆக மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்வு செய்ய தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்தது. அதன்படி வேட்பு மனுதாக்கல் நடந்தது. இதில் ஊரகப்பகுதிக்கு மாவட்ட பஞ்சாயத்து 9-வது வார்டு உறுப்பினர் ரா.அருண்குமார், 10-வது வார்டு செல்வக்குமார், 1-வது வார்டு உறுப்பினர் கு.ஞானகுருசாமி, 4-வது வார்டு த.தங்கமாரியம்மாள், 11-வது வார்டு ந.பாலசரசுவதி, 2-வது வார்டு யு.மிக்கேல் நவமணி, 16-வது வார்டு ஜெ.ஜெசிபொன்ராணி ஆகிய 7 பேர் மட்டும் மனு தாக்கல் செய்தனர். இதனால் 7 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

நகர்ப்பகுதிக்கு வாக்குப்பதிவு

நகர்ப்புற பகுதிக்கு 5 உறுப்பினர் பதவிக்கு கயத்தார் பேரூராட்சி 3-வது வார்டு கோ.அய்யாத்துரை, கோவில்பட்டி நகராட்சி 21-வது வார்டு தா.உலகராணி, தூத்துக்குடி மாநகராட்சி 32-வது வார்டு அ.கந்தசாமி, திருச்செந்தூர் நகராட்சி 1-வது வார்டு ஆ.பூ.ரமேஷ், விளாத்திகுளம் பேரூராட்சி 8-வது வார்டு மு.ராமலட்சுமி, சாத்தான்குளம் பேரூராட்சி 4-வது வார்டு செ.ஜோசப் ஆகிய 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 5 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முத்துஅரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் முன்னிலையில் நடந்தது. இந்த தேர்தலில் நகர்ப்புற உள்ளாட்சிகளை சேர்ந்த 414 பேர் வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இவர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலர்களால் வழங்கப்பட்ட அடையாள சான்றுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து வாக்களித்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 3 மணி வரை நடந்தது. வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் மொத்தம் 361 பேர் வாக்களித்தனர். ஒவ்வொருவரும் 5 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக வாக்களித்தனர்.

வாக்கு எண்ணிக்கை

தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் முதல் 5 அதிக ஓட்டு பெற்றவர்கள் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி தா.உலகராணி 351 வாக்குகளும், அ.கந்தசாமி 348 வாக்குகளும், ஆ.பூ.ரமேஷ் 347 வாக்குகளும், செ.ஜோசப் 343 வாக்குகளும், கோ.அய்யாத்துரை 337 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். கே.ராமலட்சுமி 10 வாக்குகள் மட்டும் பெற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் சான்றிதழ்களை வழங்கினார்.


Next Story