அரசு உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்தக் கோரி காத்திருப்பு போராட்டம்
மூஞ்சூபட்டு அரசு உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
மூஞ்சூபட்டு அரசு உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
உயர் நிலைப்பள்ளி
வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூஞ்சூர்பட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1969-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் 370 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 14 ஆசிரியர்கள் வேலை செய்கின்றனர். காமராஜர் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் ஆங்கில வழி கல்வி முறையும் உள்ளது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 5-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் இந்த பள்ளியில் சேர்ந்து படிக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70 முதல் 80 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று செல்கின்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் மேல் படிப்பை தொடர சுமார் 10 கிலோமீட்டர் தொலைவு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த கிராமத்திற்கு போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடுக்கம்பாறை பஸ் நிறுத்தம் வரை நடந்தே சென்று பிறகு பஸ்சில் செல்கின்றனர்.
ஆர்ப்பாட்டம்
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த 15 ஆண்டுகளாக இந்த அரசு உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கிராம மக்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திட அரசுக்கு ரூ.2 லட்சம் வைப்புத் தொகையாக கிராம மக்கள் செலுத்தியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுநாள் வரை இந்தப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக அரசு தரம் உயர்த்தாமல் காலம் தாழ்த்திவருகிறது.
இந்த நிலையில் நேற்று கிராம மக்கள் பல்வேறு அரசியல் கட்சியினருடன் இணைந்து மூஞ்சூர்பட்டு பஸ் நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு குடியாத்தம் முன்னாள் எம்.எல்.ஏ. லதா தலைமை தாங்கினார். ஆற்காடு முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன், அடுக்கம்பாறை ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு, மூஞ்சூர்பட்டு பள்ளி கட்டிட குழு தலைவர் பூபதி, முன்னாள் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் சாரதிவர்மன் வரவேற்றார்.
காத்திருப்பு போராட்டம்
இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அனைவரும் ஊர்வலமாக பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியர் முருகனிடம் மனு கொடுக்க முயற்சித்தனர். பள்ளி உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பள்ளியின் வாசலில் பந்தல் அமைத்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் சம்பத், வேலூர் தாசில்தார் செந்தில், கிராம நிர்வாக அலுவலர் ரீனா உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து சமரசம் பேசினர்.
ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல், நடப்பு கல்வியாண்டிலேயே பள்ளியை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்த பள்ளிக்கு முக்கியத்துவம் கொடுத்து தரம் உயர்த்த பரிந்துரை செய்து, அந்த பரிந்துரை நகலை கிராம மக்களுக்கு வழங்கவேண்டும் என கேட்டனர். பரிந்துரை நகல் பொதுமக்களிடம் வழங்கப்பட்டதை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர்.