தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியல்


தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியல்
x

கூத்தாநல்லூர் அருகே தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியல் நடந்தது. இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவாரூர்

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் அருகே தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியல் நடந்தது. இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள, ஓவர்ச்சேரியில் கடந்த 5 நாட்களாக குடிநீர் குழாய்களில் தண்ணீர் வரவில்லை. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராததால், வேறு வழியின்றி சற்று தூரத்தில் உள்ள ஆற்றில் தண்ணீர் எடுத்து சென்று மக்கள் பயன்படுத்தி வந்தனர்.கடந்த சில நாட்களாக இப்பகுதியில் கடுமையான வெயில் சுட்டெரிப்பதாலும் தொடர்ந்து 5 நாட்களாக குடிநீர் குழாயில் தண்ணீர் வராததாலும், பல இன்னல்கள் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர். இந்தநிலையில் தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி நேற்று தண்ணீர்குன்னம் சாலையில் உட்கார்ந்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அப்போது அவர்கள் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி தலைவர் குமார் மற்றும் கூத்தாநல்லூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் குடிநீர் குழாயில் பொருத்தப்பட்ட மோட்டாரில் பழுது ஏற்பட்டதால் தண்ணீர் வரவில்லை என்றும், மோட்டாரில் ஏற்பட்டுள்ள பழுதை உடனடியாக சரிசெய்து தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என கூறினர்.இதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டு மக்கள் கலைந்து சென்றனர். திடீரென நடைபெற்ற சாலை மறியல் காரணமாக கூத்தாநல்லூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story