தற்காலிக பாலத்தில் தார் சாலை அமைக்கப்படுமா?

பேராவூரணி - பட்டுக்கோட்டை சாலையில் தற்காலிக பாலத்தில் தார் சாலை அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பேராவூரணி;
பேராவூரணி - பட்டுக்கோட்டை சாலையில் தற்காலிக பாலத்தில் தார் சாலை அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
போக்குவரத்து நெருக்கடி
பேராவூரணி - பட்டுக்கோட்டை சாலையில் ஆண்டவன் கோவில் அருகே குறுகலான காட்டாறு பாலம் உள்ளது. இந்த பாலத்தில் மழைக்காலங்களில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடும் இதனால் போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டது. எனவே இப்பகுதியில் இந்த பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் இந்த பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்க சுமார் ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் பாலப்பணிகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது.
புதிய பாலம்
பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைத்து தற்போது போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த புதிய தற்காலிக பாலத்தில் மழைக்காலங்களில் மற்றும் வெள்ளம் ஏற்படும் நேரங்களில் தண்ணீர் செல்வதற்காக சிமெண்ட் உருளை அமைத்து அதன் மேல் மணல் போட்டு அதன் மேல் ஜல்லி கற்களை கொண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது.பொதுவாக இந்த சாலையில் போக்குவரத்து அதிகமாக காணப்படும். கனரக வாகன போக்குவரத்து, இருசக்கர வாகனங்கள் இந்த வழியாக அதிகமாக சென்று வருகின்றன.
தார் சாலை
அரசு ஆண்கள் பள்ளி, அதன் அருகே அரசு கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இவ்வழியே செல்லும் மாணவர்கள் பொதுமக்கள் கடக்கும் பொழுது இந்த தற்காலிக பாலத்தில் ஜல்லிக் கற்களை கொண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளதால் தடுமாறி விழும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தூசி பரவுவதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றன. பாலப்பணிகள் தொடங்கி ஒரு மாதம் முடிந்த நிலையில் இந்த தற்காலிக பாலத்தில் தார் சாலை அமைக்க வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோாிக்கை விடுத்துள்ளனர்.