விக்கிரவாண்டி ஆசிரமத்தில் இருந்தது கடத்தல் ரேஷன் அரிசியா?

விக்கிரவாண்டி அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்தது கடத்தல் ரேஷன் அரிசியா? என்பது குறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரமம் மீது அடுக்கடுக்கான பல்வேறு சர்ச்சை புகார்கள் எழுந்தன. இந்த புகார் தொடர்பாக ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி உள்ளிட்ட 9 பேரை கெடார் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அனுமதியின்றி விதிமுறைகளை மீறி இயங்கி வந்ததாக அன்புஜோதி ஆசிரமம் மீது புகார் அளித்திருந்த விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் தங்கவேலிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது அன்புஜோதி ஆசிரம நிர்வாகம் கடைசியாக எப்போது அனுமதி பெற்றிருந்தது?, அங்கு என்னென்ன விதிமீறல்கள் நடைபெற்றுள்ளது?, சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி கடந்த 10-ந் தேதியன்று சோதனை நடத்த சென்றபோது ஆசிரமம் என்ன நிலையில் இருந்தது?, அங்கிருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் என்ன நிலைமையில் இருந்தனர்?, அங்குள்ளவர்களை அறையில் அடைத்து வைத்து இரும்புச்சங்கிலியால் கட்டிப்போட்டிருந்தனரா?, அவர்களை குரங்குகளை அவிழ்த்துவிட்டு கடிக்க வைத்தனரா? என்பன போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் விசாரணை நடத்தினர். மேலும் ஆசிரமத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்களிடமும் சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரணை நடத்தினர்.
800 கிலோ ரேஷன் அரிசி
இதனிடையே விழுப்புரம் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு மனோகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரேகாமதி, ஏட்டுகள் பரமகுரு, மங்கலலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று காலை அன்புஜோதி ஆசிரமத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு அறையில் 20 மூட்டைகளில் அரிசி, மளிகை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சாக்கு மூட்டைகளை பிரித்து சோதனை செய்ததில் 15 மூட்டைகளில் 800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இந்த ரேஷன் அரிசி ஆசிரமத்திற்குள் எப்படி வந்தது?, யார் மூலமாக வந்தது?, இவை கடத்தி வந்து பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா?, ஆசிரமத்தில் தங்கியவர்களுக்கு ரேஷன் அரிசியை கொண்டு உணவு சமைத்து வழங்கப்பட்டதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.