ரூ.6¼ கோடியில் வாழைத்தார் ஏல மையம்-சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்

களக்காட்டில் ரூ.6¼ கோடியில் வாழைத்தார் ஏல மையம் கட்டுவதற்கு சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்.
களக்காடு:
களக்காட்டில் ரூ.6¼ கோடியில் வாழைத்தார் ஏல மையம் கட்டுவதற்கு சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டு விழா
களக்காடு யூனியன் படலையார்குளம் பஞ்சாயத்து ஜெ.ஜெ.நகரில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் ரூ 6¼ கோடி மதிப்பீட்டில் வாழைத்தார் ஏல மையம் மற்றும் மதிப்புக்கூட்டு மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஓராண்டுக்குள் பணிகள் நிறைவு
களக்காட்டில் வாழைத்தார் சந்தை அமைக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அவர் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன் இதனை நிறைவேற்றி தந்துள்ளார். இதன் கட்டுமான பணிகள் ஓராண்டுக்குள் நிறைவடையும். ராதாபுரம் தாலுகா தாமஸ் மண்டபத்தில் சர்வதேச அளவிலான விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டு 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. விரைவில் 50 ஆயிரம் பேருக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படவுள்ளது. விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத்தொகையாக ரூ.481 கோடி ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் 4 லட்சத்து, 42 ஆயிரத்து 471 பேர் பயன் பெறுவார்கள்.
நெல்லை மாவட்டத்தில் 821 கிராமங்களுக்கு தாமிரபரணி ஆற்று குடிநீர் வழங்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நாங்குநேரியில் விபத்து சிகிச்சை மருத்துவமனை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. தெரிவித்த 10 கோரிக்கைகளில் 4 கோரிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி தந்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
விவசாயிகளுக்கு இடுபொருட்கள்
தொடர்ந்து சிறு நிறுவனங்கள் தொடங்குவதற்கான திட்டத்தின் கீழ் 5 பேருக்கு ரூ 11.38 லட்சம் நிதி உதவியையும், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருட்களையும் சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
விழாவில் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷப், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) அசோக்குமார், துணை இயக்குனர் பூவண்ணன், தாசில்தார் இசக்கிபாண்டி, ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் ராஜன், செல்வகருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நம்பியாற்றை தூர்வார நடவடிக்கை
முன்னதாக சபாநாயகர் அப்பாவு ராதாபுரம், திசையன்விளை, நாங்குநேரி தாசில்தார்களையும், நீர்வளத்துறை அதிகாரிகளையும் அழைத்து தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நமது நம்பியாறு அமைப்பை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
அப்போது சபாநாயகர் அப்பாவு கூறுகையில், 'நம்பியாறு கால்வாயை சீர் செய்தால் மேலும் விவசாயம் பெருகும். நீர்வரத்து முறையாக செல்லும் பட்சத்தில் விவசாயிகள் பெரிதும் பயன்பெறுவார்கள். அந்தந்த பகுதிகளில் விவசாயிகள் குழுக்களை அமைக்க வேண்டும்.
நீர்வளத்துறை அதிகாரிகள் ஜி.பி.எஸ். கருவி மூலம் நம்பியாறு கால்வாய் முழுவதும் விரைவில் அளவீடு செய்யும் பணிகளை தொடங்கி, நம்பியாறு தொடக்க பகுதியான திருக்குறுங்குடி முதல் கடைசி பகுதியான ஆற்றங்கரை பள்ளிவாசல் பகுதி வரை பார்வையிட்டு, பூர்வாங்க பணிகள் செய்து தூர்வாரும் பணிகள் தொடங்க விரைவான நடவடிக்கை எடுப்பார்கள்.
நம்பியாற்றை தூர்வாரி, சீரமைப்புக்காக கனரக எந்திரங்களுக்கு தேவையான செலவை எனது சொந்த நிதியில் இருந்து தருகிறேன். இந்த பணிகளுக்கு விவசாயிகளிடம் எந்த விதமான நிதியும் வசூலிக்கக்கூடாது என்றார்.
கூட்டத்தில் தாமிரபரணி வடிநில கோட்ட நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் பத்மா, சிற்றார் செயற்பொறியாளர் சிவகுமார், உதவி செயற்பொறியாளர் ரமேஷ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கமலா சுயம்புராஜ், நமது நம்பியாறு அமைப்பு தலைவர் ராஜன், செயலாளர் எவரெஸ்ட், பொருளாளர் ஜான் வின்சென்ட் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.