சிறுமிக்கு இளம்வயது திருமணம்
கிருஷ்ணகிரி அருகே சிறுமிக்கு இளம்வயது திருமணம் செய்து வைத்ததாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே சிறுமிக்கு இளம்வயது திருமணம் செய்து வைத்ததாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிறுமிக்கு திருமணம்
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும், வாலிபர் ஒருவருக்கும் இளம்வயது திருமணம் நடத்த இருவீட்டு பெற்றோர்களும் முடிவு செய்தனர். இவர்களின் திருமணம் பன்னிஅள்ளி பெருமாள் கோவிலில் நடந்தது. இந்த இளம்வயது திருமணம் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோருக்கு புகார் வந்தது.
இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுஜாதா தலைமையில் அலுவலர்கள் கடந்த 28-ந் தேதி காலை கோவிலுக்கு சென்றனர். அப்போது அங்கு 18 வயது நிறைவடையாத சிறுமிக்கு திருமணம் நடந்தது தெரிய வந்தது. அலுவலர்கள் இருவீட்டு பெற்றோர் மற்றும் சிறுமி, மணமகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமிக்கு இளம்வயது திருமணம் செய்தது தெரிந்தது.
5 பேர் மீது வழக்கு
இதையடுத்து அலுவலர் சுஜாதா கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், மிட்டஅள்ளிபுதூரை சேர்ந்த கன்னியப்பன், அவரது மனைவி சரஸ்வதி, எம்.சவுளூர் பெரியசாமி, ஜீவா, சுரேந்தர் ஆகிய 5 பேர் மீது மகளிர் போலீசார் குழந்தை திருமண தடை சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.