அரிமா சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

நாகையில் அரிமா சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்;முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்
நாகையில் நாகூர், நாகப்பட்டினம் அரிமா சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட முதல் துணை ஆளுநர் சவுரிராஜ் தலைமை தாங்கி, 2023-24-ம் ஆண்டுக்கான தலைவராக ராஜகோபாலன், செயலாளராக சதீஷ்குமார், நிர்வாக அலுவலராக காத்தையன், பொருளாளராக சிவக்குமார் உள்பட நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் தலைவர் சேகர் வரவேற்றார். விழாவில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் வருவாய் ஈட்டும் வகையில் 5 பேருக்கு தையல் எந்திரங்களும், நடைபாதை வியாபாரிகள் 5 பேருக்கு நகரும் நிழல் குடைகளும், கல்லூரி மாணவிகள் 2 பேருக்கு மேல்படிப்பிற்கான நிதி உதவிகளையும், குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவியையும் வழங்கினார். மேலும் நம்பியார் நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு தொலைக்காட்சி பெட்டியையும், மரக்கன்றுகளையும் வழங்கினார். மேலும் உடல் தானம் செய்ய முன் வந்தவர்களுக்கு, பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் செயலாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.