தற்காலிக பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டது ஏன்?நகரசபை தலைவர் விளக்கம்

வேதாரண்யத்தில் தற்காலிக பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்து நகரசபை தலைவர் புகழேந்தி விளக்கம் அளித்துள்ளார்.
வேதாரண்யத்தில் தற்காலிக பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்து நகரசபை தலைவர் புகழேந்தி விளக்கம் அளித்துள்ளார்.
பணி நீக்கம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியில் தற்காலிக பணியாளர்கள் 24 பேர் சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விளக்கம் அளிப்பதற்காக நகரசபை தலைவர் புகழேந்தி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வேதாரண்யம் நகராட்சியில் கடந்த நிதி ஆண்டில் ரூ.15 கோடியே 5 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிதி ஆண்டில் ரூ.16 கோடியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.
விதிமுறை
நகராட்சியில் தற்காலிக பணியாளர்கள் 24 பேர் சமீபத்தில் பணியில் இருந்து நிறுத்தப்பட்டனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் நிர்வாகிக்கப்படும் பணியாளர்களை சுய உதவி குழுக்கள் மூலம் பணி அமர்த்தும் முறை கடந்த 2012-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்தது. இந்த விதிமுறைதான் கடந்த மாதம் (ஜூன்) வரை பின்பற்றப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த மாதம் (ஜூலை) முதல் தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சி நிர்வாகங்களுக்கான தூய்மை திட்ட பணிக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தம் பெறப்பட்டு பணிகளை மேற்கொள்ளும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. எனவே சுயஉதவிக்குழு மூலம் பணி அமர்த்தும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராகிம் ஆகியோர் உடன் இருந்தனர்.