மா மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

வத்திராயிருப்பு அருகே மா மரங்களை யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே மா மரங்களை யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
புலிகள் சரணாலயம்
வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, புலி, காட்டெருமை, காட்டுப்பன்றி, மிளா, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மேகமலை புலிகள் சரணாலயமாக உருவாக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளான கான்சாபுரம், அத்திக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் தென்னை, மா, பலா, வாழை, தேக்கு உள்ளிட்டவற்றை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் வனவிலங்குகள் அவ்வப்போது புகுந்து தென்னை, மா, பலா மரங்களை சேதப்படுத்தி வருகின்றன.
மா மரங்கள் சேதம்
அதிலும் குறிப்பாக தற்போது மாங்காய் சீசன் என்பதால் மலைப்பகுதியில் இருந்து அடிவாரத்தை நோக்கி வரும் காட்டு யானைகள் மா மரங்களை சேதப்படுத்தி மாங்காய்களை ருசி பார்த்து விட்டுச் செல்கின்றன.
கடந்த 2 நாட்களாக அத்தி கோவில் பகுதியில் உள்ள மாரியப்பன் என்பவரது மாந்தோப்பிற்குள் புகுந்த 2 காட்டு யானைகள் 20-க்கும் மேற்பட்ட மா மரங்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
விவசாயிகளுக்கு இழப்பீடு
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கான்சாபுரம், அத்தி கோவில் பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளதால் அவ்வப்போது மலைப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து தென்னை, மா உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் சூழ்நிலையும் உருவாகிறது. வனத்துறையினர் அடிவாரப்பகுதிகளில் அகழிகள் அமைத்தும், மின் வேலிஅமைத்துக் கொடுத்தால் இதுபோன்ற சூழ்நிலை தங்களுக்கு ஏற்படாது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.