சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்படுமா?

15 ஆண்டுகளாகியும் தொடங்கப்படாததால் சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்படுமா? என பெரம்பலூர் விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
சிறப்பு பொருளாதார மண்டலம்
பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டல திட்டம் அமைப்பதற்காக கடந்த 2007-ம் ஆண்டு ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், இந்திய அரசின் பெருவணிக துறை, அப்போதைய தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து விவசாயிகளிடம் இருந்து விளை நிலங்களை கையகப்படுத்தின. அப்போது விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கூறி நிலம் தர மறுத்தபோது நிலத்திற்கு உண்டான கிரய தொகையுடன் வீட்டிற்கு ஒருவருக்கு வேலையும், இலவச வீட்டுமனையும் தருவதாக ஒப்பந்த பத்திரம் பதிவு செய்து கொடுத்தனர்.
சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே திருமாந்துறை, எறையூர் சர்க்கரை ஆலை பெருமத்தூர், மிளகாநத்தம், பென்னகோணம், லெப்பைக்குடிகாடு, அயன்பேரையூர், கீரனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து பணம் கொடுத்து சுமார் 3 ஆயிரத்து 800 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
விமான உதிரி பாகங்கள்
இத்திட்டத்தினை 5 ஆண்டிற்குள் செயல்படுத்தி ரூ.827 கோடி மதிப்பீட்டில் விமான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதாகவும் உறுதி அளித்திருந்தனர். தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூரில் சிறப்பு பொருளாதார மண்டல திட்டம் அமைக்கப்பட்டால் சிங்கப்பூர் போல் தொழில் வளர்ந்த மாவட்டமாக மாறும் என உறுதி கூறினர். ஆனால் நிலம் கையகப்படுத்தி 15 ஆண்டுகளாகியும் இதுவரை திட்டம் தொடங்குவதற்கான எவ்வித அறிகுறியும் தெரியவில்லை.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் செல்லத்துரை கூறுகையில், சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படாததால், அதற்காக நிலம் கொடுத்த விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கூலி வேலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
சீமைக்கருவேல மரங்கள்
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்படி எந்த திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதோ அத்திட்டம் 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றாவிட்டால் நிலத்தை விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற சட்ட விதிகளின்படி அந்த தனியார் நிறுவனம் செயல்படவில்லை. நிலத்தை திரும்ப ஒப்படைக்கக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் விவசாயிகளுக்கு நிலம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் தரப்பில் இது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் சங்கத்தின் சார்பில் நில மீட்பு போராட்டமும் நடைபெற்றது.
கையகப்படுத்தப்பட்ட நல்ல விளை நிலங்களும் தற்போது சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து தரிசு காடாக காட்சியளிக்கிறது. நிலங்களை அந்த தனியார் நிறுவனம் சார்பாக வங்கியில் அடமானம் வைத்து கோடிக்கணக்கில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. வேலைவாய்ப்பு இல்லாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பிள்ளைகள் பஞ்சம் பிழைக்க வெளியூர் செல்கின்றனர்.
நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி திட்டத்தை கைவிடுவதாக அறிவித்து, அதற்காக கையகப்படுத்திய நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைத்த தமிழக அரசு பெரம்பலூர் மாவட்டத்திலும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்ப விவசாயிகளிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக எங்களது சங்கத்தின் மாவட்ட, மாநில மாநாடுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிலங்களை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒன்றுதிரட்டி சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டம் நடத்தக்கூடும், என்றார்.