காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பசுமையான வனப்பகுதிகள். வளைந்து, நெளிந்து செல்லும் மலைப்பாதை. மலைமுகடுகளை மோதி செல்லும் மேகக்கூட்டம். இயற்கை எழில் கொஞ்சும் அழகை தன்னகத்தே கொண்டு உள்ளது நீலகிரி. இது சுற்றுலா பயணிகளை கவர்ந்து வந்தாலும், மறுபுறம் வனவிலங்குகளால் மக்களுக்கு பாதிப்பு இருக்கதான் செய்கிறது.
ஊருக்குள் வரும் யானைகள்
மேற்கு மலைத்தொடர்ச்சியின் அங்கமாக நீலகிரி மலைப்பிரதேசம் உள்ளது. நீலகிரி மாவட்டம் 60 சதவீதத்துக்கும் மேல் வனப்பகுதிகளை கொண்டு இருக்கிறது. இங்கு காட்டு யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அவை உணவு மற்றும் தண்ணீர் தேடி இடம்பெயர்ந்து ஊருக்குள் புகுந்து வருகின்றன. அந்த சமயங்களில் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்து வருகிறது.
கூடலூர் பகுதியில் காட்டு யானைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் தாக்குதல் அடிக்கடி காணப்படுகிறது. இதனால் கிராமப்புற மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கூடலூர் வன கோட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி இருந்தாலும், மனித-வனவிலங்கு மோதல்கள் அதிகரித்து வருகிறது. கூடலூர் அருகே ஓவேலி, பாடந்தொரை, ஸ்ரீ மதுரை, சேரங்கோடு உள்பட பல இடங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து குடியிருப்புகள், விளைநிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
மனித-வனவிலங்கு மோதல்
இதனால் கூடலூர், பந்தலூர் தாலுகாக்கள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. முதுமலை, கூடலூர் வனப்பகுதிகளில் காட்டு யானைகளுக்கு உணவு தட்டுப்பாடு உள்ள காரணத்தால் ஊருக்குள் புகுந்து வருவதாக கூறப்படுகிறது.முதுமலை புலிகள் காப்பகத்தின் கரையோரம் கூடலூர் வனப்பகுதி உள்ளதால், காட்டு யானைகள் ஒவ்வொரு காலகட்டங்களில் இடம்பெயர்ந்து செல்கின்றன.
பலாப்பழ சீசன் சமயத்தில் பழங்களின் வாசனையால் ஈர்க்கப்பட்டு, அதற்கு பிடித்த உணவான பலாப்பழத்தை சுவைக்க காட்டு யானைகள் குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களை தேடி வருகின்றன. இதை தடுக்க முற்படும்போது மோதல்கள் ஏற்பட்டு மனித உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகிறது.
தற்போது கோடை காலம் தொடங்கி முதுமலை வனப்பகுதியில் இரவில் கடும் பனிப்பொழிவும், பகலில் நன்கு வெயிலும் காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள பசுமையான புல்வெளிகள் காய்ந்து வருகிறது. தொடர்ந்து காட்டு யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பயிர்களை தேடி ஊருக்குள் இன்னும் வனவிலங்குகள் அதிகளவு வர வாய்ப்புள்ளது. இதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-
உணவு தட்டுப்பாடு
சளிவயல் ஷாஜி:-
காட்டு யானைகள் நடமாட்டம் மற்றும் ஊருக்குள் வந்து முகாமிடும் சில யானைகளின் குணங்கள் வனத்துறையினருக்கு தெரியும். ஊருக்குள் வரும் காட்டு யானைகளை தடுப்பதற்கான பணிகளை மேற்கொள்ள அரசிடம் நிதி கேட்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். யானைகள் சேதப்படுத்திய பயிர்களுக்கு இழப்பீடு தொகை கேட்டால் பட்டா இல்லாத நிலம் என கூறி புறந்தள்ளுகின்றனர். படித்து முன்னேறும் ஒரு இளைஞன் வேலை தேடி வேறு இடங்களுக்கு செல்வது போல், காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு தேடி ஊருக்குள் வருகிறது. வனப்பகுதியில் உணவு தட்டுப்பாடு காரணமாகவே இந்த நிகழ்வு நடக்கிறது. இதுதவிர தெரு விளக்குகள் பராமரிப்பு இல்லாமல் காணப்படுவதால் ஊருக்குள் காட்டு யானைகள் சகஜமாக வந்து செல்கின்றன.
முதுமலையில் எந்த வனவிலங்குகளுக்கும் பயன்படாத மஞ்சள் கொன்றை மரங்கள் அதிகளவு உள்ளது. இயற்கை வனப்பகுதி அழிந்து செயற்கை வனம் இருப்பதால் யானைகள் ஊருக்குள் வருகின்றன. எனவே, வனப்பகுதியில் உணவு தேவையை பெருக்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொலைநோக்கு திட்டங்கள்
மண்வயல் பிந்துராஜ்:-
வனப்பகுதிகளின் கரையோரம் அகழியை ஆழப்படுத்த வேண்டும். தொடர்ந்து சூரிய மின் சக்தி வேலி பொருத்த வேண்டும். கேரளாவில் மக்கள் பங்களிப்புடன் வனத்துறையினர் வேலி அமைத்து வருவதால் காட்டு யானைகள் ஊருக்குள் வருவது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. மக்களும், வனத்துறையினரும் இணைந்து செயல்பட்டால் காட்டு யானைகள் ஊருக்குள் வரும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
வனப்பகுதியில் பார்த்தீனியம், உன்னி செடிகள் இருப்பதால் காட்டு யானைகள் பயிர்களை தேடி வருகிறது. இதனால் வனப்பகுதியில் பசுந்தீவனத்தை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், வனவிலங்குகள்-மனித மோதல் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
ஓவேலி ஆனந்த ராஜா:-
காட்டு யானைகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. ஆனால், அதற்கான உணவுகள் கிடைப்பது இல்லை. இயற்கையான உணவு காடுகள் அழிந்து விட்டதால் பயிர்களை சேதப்படுத்துகிறது. தொடர்ந்து வீடுகளை உடைத்து அரிசி உள்ளிட்ட தானியங்களை தின்று பழகி வருகின்றன. முதுமலை, கூடலூர் வனப்பகுதியில் காட்டு யானைகளுக்கு பிடித்தமான பசுந்தீவனங்கள் இல்லை. இதனால் ஊருக்குள் வரும் காட்டு யானைகள் மனிதர்களை தாக்கி கொன்று வருகிறது. நடப்பாண்டின் தொடக்கத்தில் ஓவேலியில் ஒருவரை காட்டு யானை தாக்கி கொன்றுள்ளது. எனவே, தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே வன விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே உள்ள பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
அகழிகளை ஆழப்படுத்த வேண்டும்
கூடலூர் அனந்த சயனம்:-
காட்டு யானைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு மூங்கில்கள். கூடலூர் பகுதியில் மூங்கில்கள் அழிந்துவிட்டது. புதிய மூங்கில்கள் உருவாக சில ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது. அழியக்கூடிய நிலையில் இருந்த சமயத்தில் முன்னெச்சரிக்கையாக மூங்கில்கள் உள்ளிட்ட நாற்றுகளை வனத்துறையினர் நட்டு இருக்க வேண்டும்.
ஆனால், சமவெளி பகுதியில் எதற்கும் பயன்படாத மரக்கன்றுகளை நடுவதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. விலங்குகளுக்கு தேவையான நாட்டு மரங்கள் ஏராளமாக உள்ளன. அதன் விதைகளை வனப்பகுதியில் தூவினால் இயற்கையாக வளர்ந்து விடும். கோடைகாலத்தில் வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்க அகழிகள் ஆழப்படுத்த வேண்டும். வனப்பகுதியில் இருக்கும் குளம், குட்டைகளை பொக்லைன் எந்திரம் கொண்டு ஆழப்படுத்தினால் மழைக்காலத்தில் கிடைக்கும் தண்ணீரை கோடை காலம் வரை சேமித்து வைக்க முடியும். தொடர்ந்து காட்டு யானைகள் வரக்கூடிய முக்கிய இடங்களில் அகழிகள், சூரிய மின் சக்தி வேலிகள் அமைக்க வேண்டும்.