வேலைவாய்ப்பை அதிகரிக்க ஆயத்த ஆடை பூங்கா அமைக்கப்படுமா? கம்பம் மக்கள் எதிர்பார்ப்பு


வேலைவாய்ப்பை அதிகரிக்க ஆயத்த ஆடை பூங்கா அமைக்கப்படுமா? கம்பம் மக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேலை வாய்ப்பை அதிகரிக்க கம்பத்தில் ஆயத்த ஆடை பூங்கா அமைக்கப்படுமா என்று பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

தேனி

மலையும், மலை சார்ந்த தேனி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பூமியாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதி திகழ்கிறது. தமிழக-கேரளா எல்லைப்பகுதியில் கம்பம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கிற மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும்.

ஆயத்த ஆடை தயாரிப்பு

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல், தென்னை, வாழை, திராட்சை, மா மற்றும் தோட்ட பயிர்கள், மானவாரி பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதனால் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பகுதி மக்களுக்கு விவசாயம் தான் வாழ்வாதாரமாக இருந்து வந்தது.

நாளடைவில் விவசாயத்தில் நவீன எந்திரங்கள் புகுத்தப்பட்டதாலும், விளை நிலங்கள், விலை நிலங்களாக மாற்றப்பட்டதாலும் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. இதனால் விவசாய தொழிலை நம்பி கடன் வாங்கிய தொழிலாளர்கள் கடனை திருப்பி செலுத்த முடியாமல் திருப்பூர், கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.

அதன்பின்னர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், கம்பம் நகரில் ரெடிமேடு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் படிப்படியாக தொடங்கப்பட்டு சிறிது காலத்தில் குட்டி திருப்பூர் போல் செயல்பட தொடங்கியது.

அழிவின் விளிம்பில்...

இதையடுத்து டெய்லர், கட்டிங் மாஸ்டர், அயனிங் மாஸ்டர், பேக்கிங் பரிவு, காஜா பட்டன் வேலைக்கு தொழிலாளர்கள் தேவைப்பட்டதால் உள்ளூரில் வேலை வாய்ப்பு அதிகரித்தது. இதன்காரணமாக வெளியூருக்கு இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் சொந்த ஊரான கம்பத்திற்கு திரும்பினர்.

கம்பத்தில் தயாரான ரெடிமேடு ஆடைகள் தமிழகம் மற்றும் கேரள மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் ஆயத்த ஆடை வடிவமைப்பில் நவீன எந்திரங்கள் வேலைப்பாடு, டிசைனிங், எம்ப்ராய்டரிங், சலவை செய்யப்பட்ட சட்டைகள் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்தன. இதனால் சாதாரண எந்திரங்களை கொண்டு ஆடை தயாரித்த நிறுவனங்களால், வெளிமாநில ஆடை நிறுவனங்களுக்கு போட்டியாக சட்டைகளை தயாரித்து கொடுக்க முடியவில்லை.

அதிநவீன எந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு நிதி பற்றாக்குறை, வங்கி உதவி கிடைக்காமல் பொருளாதார சுமை ஏற்பட்டு நாளடைவில் படிப்படியாக ஆடை நிறுவனங்கள் மூடு விழாவை நோக்கி சென்றன. 200 நிறுவனங்கள் இருந்த இடத்தில், தற்போது 50 நிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இதனால் அழிவின் விளிம்பில் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன.

வேலை இழப்பு

இதையடுத்து வழக்கம் போல் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட தமிழக-கேரள எல்லையான இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.

தற்போது தினமும் ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாக ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர். இவர்கள் அதிகாலையில் வேலைக்கு சென்று மாலை வீடு திரும்புகின்றனர். இதனால் குழந்தைகளை பராமரிக்க முடியாமல் போகிறது.

காத்திருக்கும் கம்பம் பகுதி மக்கள்

வறுமையின் காரணமாக, உள்ளூரில் வேலை இல்லாததால் சிரமத்தை பொறுத்துக்கொண்டு 8 பேர் செல்லக்கூடிய ஜீப்பில் 14 பேருக்கு மேல் பயணம் செய்து தோட்ட வேலைக்கு சென்று வருகின்றனர். எனவே கம்பம் பகுதியில் அழிவின் விளிம்பில் உள்ள ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிலை மீட்டெடுக்க வேண்டும். இதற்கு கம்பம் பகுதியில் ஆயத்த பூங்கா அமைக்க வேண்டும்.

மேலும் ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கு நவீன எந்திரங்கள் கொள்முதல் செய்ய, மாவட்ட தொழில் மையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆயத்த ஆடை பூங்கா அமைக்கப்படுமா? என்று வழிமேல் விழி வைத்து கம்பம் பகுதி மக்கள் காத்திருக்கின்றனர். இதுகுறித்து கம்பம் பகுதியை சேர்ந்த மக்கள் கூறியதாவது:-

அதி நவீன எந்திரம்

கம்பம் வட்டார ஆடை தயாரிப்பாளர் மற்றும் வியாபாரிகள் சங்க தலைவர் (ராஜகணேசன்):- ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு அதி நவீன எந்திரங்கள், பிணை இல்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் கம்பம் பகுதியில் ஆயத்த ஆடை பூங்கா மற்றும் சிட்கோ அமைக்க வேண்டும்.

ஆயத்த ஆடை பூங்கா அமையும் போது 500-க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை நிறுவனங்கள் செயல்பட தொடங்கும். இதன் மூலம் இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு அதிகரிக்கும், மேலும் உள்ளூரில் ஆடை உற்பத்தி, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கும்.

தொழிற்பயிற்சி

ஆடை உற்பத்தியாளர் (முத்தையா):- தையல் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனை போக்க கம்பத்தில் பெண்களுக்கான அரசு தையல் பயிற்சி மையம் தொடங்க வேண்டும். பெண்கள் தையல் வேலை கற்றுக்கொள்ளும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ரூ.400 வரை சம்பாதிக்கலாம்.

தோட்ட தொழிலாளி (தேவி):- குடும்ப சூழ்நிலை காரணமாக 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்தவுடனே இளம்பெண்கள் ஏலக்காய் தோட்டத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. குறைந்த அளவு சம்பளம், சிரமமான மலைப்பாதை பயணம் என ஒவ்வொரு நாளும் மன வலியுடன் வேலைக்கு சென்று வருகிறோம்.

மேலும் தொழிலாளர் நலவாரியம் சார்பில் அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் நலவாரியம் உண்டு. ஆனால் விவசாய தொழிலாளர்களுக்கு நலவாரியம் இல்லாததால் எங்களுக்கு அரசு சலுகைள் கிடைக்கவில்லை, எனவே உள்ளூரில் படித்து முடித்தவர்களுக்கு ஊக்கதொகையுடன் தொழிற்பயிற்சி வழங்கி, வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story