வெளிநாட்டில் தவிக்கும் கணவரை மீட்டு தரக்கோரி கலெக்டரிடம் பெண் மனு


வெளிநாட்டில் தவிக்கும் கணவரை மீட்டு தரக்கோரி கலெக்டரிடம் பெண் மனு
x

உயிருக்கு ஆபத்தான நிலையில் வெளிநாட்டில் தவிக்கும் தனது கணவரை மீட்டு தரவேண்டும் என்று கூறி நெல்லை கலெக்டரிடம் பெண், தனது குடும்பத்துடன் வந்து மனு கொடுத்தார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மாற்றுத்திறனாளிகள் அமர்ந்து இருந்த இடத்துக்கே சென்றும் மனுக்களை பெற்றார். நேற்று இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு கேட்டு ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வந்திருந்தனர். இதனால் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று மனு கொடுத்தனர்.

குடும்பத்தினருடன் பெண் மனு

நாங்குநேரி அருகே உள்ள இரைப்புவாரி கிராமத்தை சேர்ந்தவர் சுடலைமணி. இவரது மனைவி சுயம்புகனி (வயது 38). இவர் தனது குடும்பத்தினருடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில், எனது கணவர் சுடலைமணி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 1 வருடமாக அவரிடம் இருந்து எங்களுக்கு பணம் வரவில்லை. அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, தீராத வயிற்று வலியால் உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்து வருவதாக தெரிவித்தார். மேலும் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமலும், சம்பளம் கொடுக்காமலும் உள்ளனர். எனவே அங்குள்ள தூதரகம் மூலம் எனது கணவரை மீட்டு தரவேண்டும் என்று கூறியுள்ளார்.

ராமையன்பட்டி பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வகுமார், வார்டு உறுப்பினர்கள் மாரியப்பபாண்டியன், மனோகர் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊராட்சி மன்ற கட்டிடம் பொது இடத்தில் உள்ளது. அந்த இடத்தில் விளையாட்டு மைதானம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் ஏராளமானோர் பயனடைந்து வருகிறார்கள். அங்கு வைத்து சமத்துவ பொங்கல், கபடி போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அந்த மைதானத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் குழிகள் தோண்டப்பட்டுள்ளது. எனவே அந்த மைதானத்தை சரிசெய்து மீண்டும் பொதுமக்கள் விளையாட்டு போட்டிகள் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

சாலை வசதி

மானூர் தாலுகா நடுபிள்ளையார்குளத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள், சேகரகுருவானவர்கள் பிராங்கிளின் ஜோசப்ராஜ், ஆமோஸ், உபதேசியார் சாது ஜேம்ஸ்ராஜ் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கிறிஸ்தவ பாடல்கள் பாடி ஜெபம் செய்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் கிறிஸ்தவ சபை கட்டுமானத்திற்கு தடையில்லா சான்று கேட்டு 4 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்தோம். ஆனால் இதுவரை வழங்கவில்லை. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவோம் என்று கூறிஇருந்தனர்.

மூலைக்கரைப்பட்டி துத்திக்குளம் 15-வது வார்டு பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதி சுடுகாட்டுக்கு சாலை அமைத்து தர வேண்டும் என தெரிவித்திருந்தனர். வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த கோமதிநாயகம் என்பவர், 4 முறை வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அந்த மனு நகல்களை வாயில் கட்டியவாறு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தார்.

நெல் கொள்முதல் நிலையம்

அம்பை அருகே உள்ள அயன்திருவாலீஸ்வரம் பகுதி பொதுமக்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, தங்கள் ஊரில் உள்ள சமுதாய நலக்கூடத்திற்கு பதில் மாற்று இடத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர். மேலகுலவணிகர்புரம் பொதுமக்கள் தங்கள் ஊரில் உள்ள கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.


Next Story