கடன் தொல்லையால் விஷம் குடித்து பெண் தற்கொலை


கடன் தொல்லையால் விஷம் குடித்து பெண் தற்கொலை
x

ஆவடி அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

ஆவடி,

ஆவடியை அடுத்த திருநின்றவூர் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவருடைய மனைவி பவானி (வயது 35). இவர், 2 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி (45) என்பவரிடம் கேட்டரிங் தொழில் தொடங்குவதாக கூறி ரூ.2 லட்சம் கடன் வாங்கினார்.

இந்த பணத்தை பவானி நீண்ட நாட்களாக திருப்பி கொடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விஜயலட்சுமி, அடிக்கடி பவானி வீட்டுக்கு சென்று கடனை திரும்ப கேட்டு வந்தார்.

வாக்குவாதம்

பவானி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை விஜயலட்சுமியிடம் கொடுத்தார். அந்த காசோலை வங்கியில் பணம் இல்லாததால் திரும்பி வந்தது. இதையடுத்து கடந்த 14-ந்தேதி மீண்டும் விஜயலட்சுமி பவானி வீட்டுக்கு சென்று பணத்தை கேட்டார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக பவானியை அவரது கணவர் ஜெயபிரகாஷ் கண்டித்தார்.

பெண் கைது

இதனால் மனமுடைந்த பவானி, வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பவானி, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விஜயலட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story