குழந்தைகளுடன் வாய்க்காலில் குதித்து பெண் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது

குழந்தைகளுடன் வாய்க்காலில் குதித்து பெண் இறந்த சம்பவத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது செய்யப்பட்டார்.
கடத்தூர்
குழந்தைகளுடன் வாய்க்காலில் குதித்து பெண் இறந்த சம்பவத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது செய்யப்பட்டார்.
வாய்க்காலில் குதித்தார்
கோபி அருகே உள்ள கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தீபக். இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்தே வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுடைய மகள்கள் மதுநிஷா (வயது 12), தருணிகா (6).
கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த விஜயலட்சுமி தன்னுடைய அண்ணன் ராமசாமியின் செல்போனுக்கு எனக்கு வாழப்பிடிக்கவில்லை. குழந்தைகளையும் விட்டுச்செல்ல விருப்பமில்லை மன்னிச்சிடுங்க என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு ஸ்கூட்டரில் மகள் இருவரையும் அழைத்துக்கொண்டு குருமந்தூர் அருகே சுட்டிக்கல் பகுதியில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றார். பின்னர் மகள்கள் இருவரையும் வாய்க்காலில் தள்ளிவிட்டு தானும் குதித்து விட்டார்.
கணவர் கைது
இதையறிந்த உறவினர்கள் கீழ்பவானி வாய்காலில் 3 பேரையும் தேடினார்கள். அப்போது நாகதேவன்பாளையம் அருகே வாய்க்காலில் விஜயலட்சுமியின் உடல் மீட்கப்பட்டது. மேலும் ஆயிபாளையம் என்ற இடத்தில் மரக்கிளையை பற்றி தொங்கிக்கொண்டு இருந்த மதுநிஷாவை உறவினர்கள் உயிரோடு மீட்டார்கள். தருணிகா என்ன ஆனார்? என்று தெரியவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடைபெறுகிறது.
இந்தநிலையில் விஜயலட்சுமியின் தாயார் லட்சுமி என்பவர் கடத்தூர் போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் அவர், தீபக் எங்களிடம் பணம் கேட்டார். நாங்கள் ரூ.15 லட்சம் கொடுத்தோம். மறுபடியும் சொத்துகள் கேட்டார். இதனால் என் மகள் மனுமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். என்று கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து போலீசார் விஜயலட்சுமியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து தீபக்கை கைது செய்தார்கள்.