மல்லூர் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு: பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

மல்லூர் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பனமரத்துப்பட்டி:
ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு
மல்லூர் அருகே மூக்குத்திப்பாளையத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை மீட்க வேண்டும் எனக்கூறி அதே பகுதியை சேர்ந்த தனி நபர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில் ஐகோர்ட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் மூக்குத்திப்பாளையம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார்.
தீக்குளிக்க முயற்சி
இதன் பேரில் சேலம் துணை தாசில்தார் கணேசன் தலைமையிலான வருவாய்த்துறையினர் நேற்று மூக்குத்திப்பாளையம் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள நாவல்மரத்துக்காடு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற போது அந்த பகுதியை சேர்ந்த பொண்ணுபையன் என்பவரின் மனைவி செல்வி (வயது 50) என்பவர் தனது வீட்டை இடிக்கக்கூடாது எனக்கூறி திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையிலான போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர்.
கம்யூனிஸ்டு கட்சியினர்
இதனிடையே அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாது என இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் பொக்லைன் எந்திரத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வருவாய் துறையினரும், போலீசாரும் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரிகள் கூறும் போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவு உள்ளதால் அதனை மீறி எதுவும் செய்ய முடியாது என்றும், தங்களுக்கு தேவைப்பட்டால் இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடுத்து தீர்வு பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் பின்னர் அதிகாரிகள் அங்கு ஆக்கிரமித்து பயிரிடப்பட்டிருந்த விவசாயிகள் பயிர்களை அகற்றினர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.