செயல் அலுவலர் பணிக்கு எழுத்து தேர்வு-தாமதமாக வந்த தேர்வர்களுக்கு அனுமதி மறுப்பு

சேலம் மாவட்டத்தில் 4 இடங்களில் செயல் அலுவலர் பணிக்கு எழுத்து தேர்வு நடந்தது. தாமதமாக வந்த தேர்வர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.
தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள 42 செயல் அலுவலர் கிரேடு-3 பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்து தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் நேற்று முன்தினம் 4 தேர்வு மையங்களில் நடந்த எழுத்து தேர்வை 2 ஆயிரத்து 350 பேர் எழுதினர். 2 ஆயிரத்து 37 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதைத்தொடர்ந்து மதியம் அறிவுத்திறன் தேர்வு நடைபெற்றது.
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் நேற்று செயல் அலுவலர் கிரேடு-4 பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது. இதற்காக 6 தேர்வு மையங்களில் 18 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 312 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். காலையில் நடந்த தேர்வை 2 ஆயிரத்து 712 பேரும், மாலையில் நடந்த தேர்வை 2 ஆயிரத்து 652 பேரும் எழுதினர். காலையில் 2 ஆயிரத்து 600 பேரும், மாலையில் 2 ஆயிரத்து 660 பேரும் தேர்வு எழுதவரவில்லை. தேர்வில் முறைகேடு ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் வருவாய்த்துறை, கல்வித்துறையை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சேலம் அரசு கலைக்கல்லூரியில் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி வந்த தேர்வர்கள், தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் வெளியில் ஏமாற்றத்துடன் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.