பயங்கரவாதத்துக்கான டிரோன்கள் உலகளாவிய ஆபத்து: ஐ.நா.வில் இந்தியா கருத்து


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 30 Jun 2021 2:23 AM GMT (Updated: 30 Jun 2021 2:23 AM GMT)

டிரோன் மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் சம்பவங்களில், சா்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும் என்று ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தி உள்ளது.

நியூயார்க், 

ஜம்மு - காஷ்மீர் விமான நிலையத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதிகள் டிரோன்கள் மூலமாக இரட்டை வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததில், விமானப்படை வீரர்கள் 2 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. 

இந்த நிலையில் ஐ.நா. பொதுக்குழுவில் உலகளாவிய பயங்கரவாதம் குறித்த விவாதத்தின்போது, ஜம்மு காஷ்மீர் விமானப்படை தளம் மீதான தாக்குதல் குறித்து பிரச்சினை எழுப்பிய இந்தியா, பயங்கரவாதத்துக்கான டிரோன்கள் உலகளாவிய ஆபத்து என கருத்து தெரிவித்தது. மேலும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆயுதம் ஏந்திய டிரோன்களை பயன்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து சர்வதேச சமூகம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியது.

இதுதொடர்பாக இந்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் வி.எஸ்‌.கே.கவுமுடி பேசுகையில், “பயங்கரவாத செயல்களுக்கான பிரசாரம், ஆள்சோ்ப்பு, நிதி உதவி பெறுவது, தொழில்நுட்பங்களை தவறான பயன்படுத்துவது ஆகியவை பயங்கரவாத அச்சுறுத்தல்களாக மாறிவிட்டன. அவற்றுக்கு தக்க பதிலடி அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகள் தற்போது தாக்குதல்களை நடத்த ட்ரோன்களைப் பயன்படுத்த தொடங்கி விட்டனா். இது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

குறைந்த செலவிலும், எளிதிலும் டிரோன்கள் கிடைப்பதால் பயங்கரவாத குழுக்கள் இதை வைத்து உளவு பார்ப்பது, ஆயுதங்கள் கடத்துவது, குறிப்பிட்ட இடத்தை தாக்குவது போன்ற செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றன. இது உலக அளவில் பாதுகாப்பு அமைப்புகளுக்கு அபாயகரமாகவும், சவாலாகவும் அமைந்துள்ளது.

ஏற்கெனவே ஆளில்லா விமானங்கள் மூலம் எல்லையைத் தாண்டி ஆயுதங்கள் கடத்தப்படுவதை இந்தியா சந்தித்து வருகிறது. தற்போது டிரோன்கள் மூலம் ஆயுதங்கள் வைத்து தாக்கப்படுவதை ஐ.நா. உறுப்பு நாடுகள் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். கொரோனா தொற்று பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களை இணையவழி மூலம் பயங்கரவாத செயல்களுக்கு ஆள்சோ்க்கப்படுகின்றன. விடியோ கேம்ஸ் மூலமாகவும் பயங்கரவாதிகள் பிரசாரம் மேற்கொண்டு ஆள்களைச் சோ்க்கும் பணியில் ஈடுபடுகின்றனா். 

இதுபோன்ற சா்வதேச பயங்கரவாத சவால்களையும், தகவல் தொழில்நுட்பங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதையும் எதிர்கொள்ள உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசியல், மத நம்பிக்கையின் அடிப்படையில் பயங்கரவாதத்தை பரப்பி வருபவா்களுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இல்லையென்றால், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் நம்மை பரித்துவிட்டு, பலவீனத்தை ஏற்படுத்திவிடும். பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கி வரும் நாடுகளுக்கு எதிராக எந்தவித தயவும் காட்டாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சா்வதேச பயங்கரவாத குழுக்கள் சமூகத்தில் வெறுப்புணா்வை பரப்ப சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருவது கவனத்தில் எடுத்து கொள்ளப்பட வேண்டும்” என்று அவர் கூறினார். 

Next Story