சர்ச்சைகளை தாண்டி.. ஓடிடியில் வெளியாகும் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம்

இந்த படம் கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

Update: 2024-02-08 13:04 GMT

சென்னை,

விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த ஆண்டு மே மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இந்த படம் ரூ.240 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இந்த படம் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளதால் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் கோர்ட்டு உத்தரவுப்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த படம் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெளியானது.

இப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட திரைப்படம் என்கிற விமர்சனம் எழுந்த நிலையில், இப்படத்தை பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் இது இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட படம் இல்லை, தீவிர வாதத்துக்கு எதிராகவே எடுக்கப்பட்ட படம் என்பதை தெளிவு படுத்தினர். இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்குவங்கத்திலும் இந்த படம் திரையிடப்பட்டது.

இந்த படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை ZEE5 நிறுவனம் கைப்பற்றியதை அடுத்து கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படம் வருகிற 16ம் தேதி ZEE5 தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு சர்ச்சைகளை தாண்டி இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்