ஓட்டுக்கு பணம் பெறுவது தவறுதான்... ஆனால் - நடிகர் விஜய் ஆண்டனி

நான் அனைத்துக் கட்சிகளுக்கும் ஆதரவு அளிக்கிறேன் என்று நடிகர் விஜய் ஆண்டனி கூறினார்.

Update: 2024-04-09 01:22 GMT

image courtecy:instagram@vijayantony

சென்னை,

இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் 'ரோமியோ'. இந்த படத்தில் மிருணாளினி ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா, ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி கோவையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ''நான் நடித்துள்ள ரோமியோ படத்தில் நாயகி முதல் இரவு காட்சியில் மது அருந்துவதுபோன்று வெளியான போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியது.

படத்தில் ஒரு சிறிய காட்சியாக மட்டுமே அதை வெளிப்படுத்தி உள்ளோம். கலாசார சீரழிவு போன்ற விஷயங்கள் புகுத்தப்படவில்லை. பெண்கள் என்றுமே ஆண்களுக்கு மேலானவர்கள். ஆண்கள் தோல்வி அடையும்போது அவர்களை தேற்றுவது தாய், மனைவி போன்றவர்கள்தான்.

படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் நான் சிக்கி மீண்ட பிறகு தற்போது மனதளவில் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நல்ல படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கிறது. சமீபத்தில் வெளியான சில படங்கள் இதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறார். நான் அனைத்துக் கட்சிகளுக்கும் ஆதரவு அளிக்கிறேன். தற்போது ஓட்டுக்கு பணம் வழங்குவதாகவும் பெறுவதாகவும் பேசப்படுகிறது.

ஓட்டுக்கு பணம் பெறுவது தவறாக இருந்தாலும் வறுமை சூழ்நிலையை கருதி ஓட்டுக்கு வழங்கப்படும் பணத்தை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் பணம் பெற்றதால் அந்த கட்சிக்குத்தான் ஓட்டு என்று முடிவு செய்யாமல் நல்லவர்களுக்கு வாக்களிக்கலாம்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்