சரித்திர கதையில் ரஜினி

ரஜினிகாந்தும் சரித்திர கதையம்சம் கொண்ட படமொன்றில் நடிக்க முடிவு செய்து இருப்பதாகவும் இந்த படத்தை பி.வாசு இயக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2023-01-15 01:46 GMT

சரித்திர கதையம்சம் உள்ள படங்கள் சமீபகாலமாக வெற்றி பெறுவதால் அவற்றின் பக்கம் நடிகர்கள், இயக்குனர்கள் பார்வை திரும்பி உள்ளது. ஏற்கனவே 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' வெற்றியும் படக்குழுவினரை மகிழ்ச்சியில் திக்கு முக்காட வைத்தது.

அடுத்து திரைக்கு வர உள்ள 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்து திரைக்கு வந்து வெற்றி பெற்ற 'ஆர் ஆர் ஆர்' படமும் சரித்திர கதையம்சம் கொண்டது. இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் உயரிய 'கோல்டன் குளோப்' விருதை வென்றுள்ளது.

இந்த நிலையில் ரஜினிகாந்தும் சரித்திர கதையம்சம் கொண்ட படமொன்றில் நடிக்க முடிவு செய்து இருப்பதாகவும் இந்த படத்தை பி.வாசு இயக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பி.வாசு இயக்கிய 'சந்திரமுகி' படத்தில் ரஜினிகாந்த் ஒரு கதாபாத்திரத்தில் மன்னனாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் பற்றிய தகவல் 'ஜெயிலர்' படப்பிடிப்பு முடிந்ததும் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்