தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று பகலில் புறப்பட்டு சென்றது பெரும்பாலான பெட்டிகள் பயணிகள் இல்லாமல் காலியாக இருந்தன

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் 150 பயணிகளுடன் வழக்கத்துக்கு மாறாக நேற்று காலை 11 மணிக்கு புறப்பட்டு சென்றது.

Update: 2016-12-14 20:00 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் 150 பயணிகளுடன் வழக்கத்துக்கு மாறாக நேற்று காலை 11 மணிக்கு புறப்பட்டு சென்றது.

ரெயில் போக்குவரத்து பாதிப்பு

வார்தா புயல் தாக்கியதில் சென்னையில் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வரும் ரெயில்களை இயக்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. அதன்படி, 2 நாட்களுக்கு முன்பு இரவு 7 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்ற முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் விருதாச்சலத்துடன் நிறுத்தப்பட்டது. அங்கிருந்து பயணிகள் பஸ்களில் ஏற்றி சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பயணிகள் அவதி

அந்த ரெயில் மீண்டும் நேற்று முன்தினம் மதியம் புறப்பட்டு வந்தது. இந்த ரெயில் நள்ளிரவில் தூத்துக்குடி வந்தடையும் என கூறப்பட்டது. ஆனால், இந்த ரெயில் தாமதமாக நேற்று அதிகாலையில் தூத்துக்குடியை வந்தடைந்தது. நேற்று முன்தினம் இரவு இந்த ரெயிலில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்தவர்களில் பெரும்பாலான பயணிகள் டிக்கெட்டுகளை ரத்து செய்து விட்டனர். சில பயணிகள் நம்பிக்கையுடன் நேற்று முன்தினம் இரவு முதல் ரெயில் நிலையத்திலேயே காத்திருந்தனர். அந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பகலில் சென்ற ரெயில்

அதிகாலையில் வந்த இந்த ரெயில் நேற்று காலை 6 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு புறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ரெயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் ஆர்வத்துடன் ரெயிலில் ஏறி காத்திருந்தனர். ஆனால் ரெயில் புறப்படுவதில், தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது.

நீண்ட அலைக்கழிப்புக்கு பின்னர், நேற்று காலை 11 மணி அளவில் 24 பெட்டிகளுடன் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலில் 150 பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர். இதனால் பெரும்பாலான ரெயில் பெட்டிகள் காலியாக காணப்பட்டன. இந்த ரெயில் வழக்கமாக தினமும் இரவு 7 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்வது வழக்கம்.

மேலும் செய்திகள்