பாலக்காடு அருகே கார் கவிழ்ந்தது ஈரோடு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

ஈரோட்டில் இருந்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற கார் பாலக்காடு அருகே கவிழ்ந்தது. இதில் மாணவர்கள் 2 பேர் பலியானார்கள். 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கார் கவிழ்ந்தது ஈரோடு மாவட்டம் சென்னி

Update: 2016-12-14 22:15 GMT
கொழிஞ்சாம்பாறை,

ஈரோட்டில் இருந்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற கார் பாலக்காடு அருகே கவிழ்ந்தது. இதில் மாணவர்கள் 2 பேர் பலியானார்கள். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கார் கவிழ்ந்தது

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள பள்ளக்காட்டுபுதூரை சேர்ந்தவர் சண்முகம். விசைத்தறிக்கூட உரிமையாளர். அவருடைய மகன் மகேந்திரன்(வயது24). நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கொக்கராயன் பேட்டையை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் தனசேகரன்(25). இவர்கள் இருவரும் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படித்து வந்தனர்.

நேற்று காலை இருவரும் கார் ஒன்றில் அதே என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் தங்களது நண்பர்கள் 7 பேருடன் கேரள மாநிலம் கொச்சிக்கு சுற்றுலா சென்றனர். இவர்கள் சென்ற கார் பாலக்காடு மாவட்டம் அட்டப்பள்ளம் என்ற இடத்தில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் அந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரின் இடிபாடுக்குள் சிக்கிய மகேந்திரன் உள்பட 9 பேரும் படுகாயம் அடைந்து வலியால் அலறி துடித்தனர். விபத்து குறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வாளையார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

2 மாணவர்கள் பலி

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் உயிருக்கு போராடிய 9 மாணவர்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் அனைவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதும் சிகிச்சை பலனின்றி மகேந்திரன் மற்றும் தனசேகரன் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த மாணவர் ஆசிப் உள்பட 7 பேருக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வாளையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா வந்த இடத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்