தொடர் மின்வெட்டு எதிரொலி துணிகளை சலவை செய்ய செம்பரம்பாக்கம் ஏரிக்கு படையெடுக்கும் பொதுமக்கள்

‘வார்தா’ புயலின் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர் மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக பொதுமக்கள் துணிகளை சலவை செய்ய செம்பரம்பாக்கம் ஏரிக்கு படையெடுத்து வருகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரி சென்னையில் உள

Update: 2016-12-14 22:15 GMT

பூந்தமல்லி,

‘வார்தா’ புயலின் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர் மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக பொதுமக்கள் துணிகளை சலவை செய்ய செம்பரம்பாக்கம் ஏரிக்கு படையெடுத்து வருகின்றனர்.

செம்பரம்பாக்கம் ஏரி

சென்னையில் உள்ள ஏரிகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஏரி பூந்தமல்லியில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை மக்களின் தாகத்தை தீர்க்கும் இதே ஏரிதான், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை மக்களை பரிதவிக்கவும் வைத்தது.

பேய் மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர் சென்னையின் பல்வேறு பகுதிகளை வெள்ளக்காடாக மாற்றியது. வழக்கத்தை விட அளவுக்கு அதிகமாக அனைத்து மதகுகள் வழியாகவும் உபரி நீர் திறந்து விடப்பட்டதால் ஏரியின் மதகுகள், கரைகள் என பல்வேறு இடங்களில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் ஏரியே உடைந்து விடுமோ என்ற வகையில் மக்களை அச்சமடைய செய்தது.

ஆனால் இந்த ஆண்டு பெய்ய வேண்டிய பருவமழை பெய்ய தவறியதால் கடந்த வாரம் வரை செம்பரம்பாக்கம் ஏரி அதற்கு நேர் மாறாக வறண்டு காணப்பட்டது. எனவே செம்பரம்பாக்கம் ஏரியால் சென்னை மக்களின் தாகம் தீர்க்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

வார்தா புயல்

இந்த நிலையில் கடந்த 12–ந்தேதி வந்த ‘வார்தா’ புயல் மற்றும் அதனை தொடர்ந்து பெய்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் சுமார் 4 அடி உயர்ந்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும். ஏரியின் மொத்த நீர் மட்டம் 24 அடி. ஏரி பாதுகாப்பு கருதி 22 அடியை தொட்டவுடன் உபரி நீர் திறந்து விடப்படுவது வழக்கம். தற்போது ஏரியில் மொத்த நீர் கொள்ளளவு 648 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 9.20 அடியாகவும் உள்ளது. நீர் வரத்து 1,558 கன அடியாக உள்ளது.

வார்தா புயலின் தாக்கத்தால் தொடர்ந்து 3 நாட்களாக மின்சாரம் தடைபட்டுள்ளதால் சென்னை மக்களின் குடிநீர் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக தினமும் 54 கன அடி நீர் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

வார்தா புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் மின்கம்பங்கள் சரிந்து குன்றத்தூர், மாங்காடு, பூந்தமல்லி, அனகாபுத்தூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கிப்போய் உள்ளது.

மக்கள் படையெடுப்பு

குளிப்பதற்கு, துணிகளை சலவை செய்வதற்கு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர்.

கடந்த 2 நாட்களாக மழை குறைந்து, வெயில் அடித்து வருவதால் பொதுமக்கள் துணிகளை சலவை செய்ய செம்பரம்பாக்கம் ஏரிக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர். கூட்டம் கூட்டமாக கார், மோட்டார் சைக்கிள்களில் அழுக்கு துணிகளோடு வரும் மக்கள் ஏரியில் குளித்து விட்டு, துணிகளை சலவை செய்து அவற்றை அங்கேயே உலர வைத்து எடுத்து செல்கின்றனர்.

இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் பார்வையாளர்கள் கூட்டத்தை விட குளிக்கவும், துணிகளை சலவை செய்ய வரும் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் அவர்களுடன் வந்திருந்த குழந்தைகளும் இந்த ஏரியில் மிகுந்த ஆர்வத்துடன் குளித்ததை பார்க்க முடிந்தது.

சில வாலிபர்கள் 5 கண் மதகுகளின் மேல் இருந்து குதித்து குளித்தனர். தற்போது ஏரியில் மீன்கள் அதிகளவில் கிடைப்பதால் அங்கு வரும் பொதுமக்கள் மீன்களை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

மேலும் செய்திகள்