காயாமொழி அருகே கற்குவேல் அய்யனார் கள்ளர்வெட்டு திருவிழா கோலாகலம் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித மணல் எடுத்தனர்

காயாமொழி அருகே தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர்வெட்டு திருவிழா நடந்தது. விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித மணல் எடுத்தனர்.

Update: 2016-12-15 20:30 GMT
உடன்குடி,

காயாமொழி அருகே தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர்வெட்டு திருவிழா நடந்தது. விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித மணல் எடுத்தனர்.

கற்குவேல் அய்யனார் கோவில்


தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த கோவில்களில் திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழியை அடுத்த தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலும் ஒன்றாகும். கோவிலில் ஆண்டுதோறும் கள்ளர்வெட்டு திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கள்ளர்வெட்டு திருவிழா கடந்த மாதம் 16–ந்தேதி சிறப்பு அபிஷேகம், தீபாராதனையுடன் தொடங்கியது.

ஒரு மாதம் நடந்த விழா நாட்களில் தினமும் காலை, மதியம் சிறப்பு பூஜைகள், மாலையில் வில்லிசை நடந்தது. கடந்த 13–ந்தேதி காலையில் ஐவர்ராஜா– மாலையம்மன் பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலையில் பெண்கள் வண்ண கோலமிடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் திருவிளக்கு பூஜை, இரவில் உற்சவர் திருவீதி உலா, இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

கள்ளர்வெட்டு திருவிழா

விழாவின் சிகர நாளான நேற்று காலையில் 108 பால்குடம் ஊர்வலம் நடந்தது. பின்னர் யானை மீது வெள்ளிக்குடத்தில் தாமிரபரணி தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம், மதியம் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை 4.30 மணி அளவில் சுவாமி கள்ளர்வெட்டு நிகழ்ச்சிக்கு புறப்பட்டார். கோவிலில் இருந்து கள்ளர் என்ற இளநீரை கோவிலின் பின்புறம் உள்ள செம்மண் தேரிக்கு பூசாரி எடுத்து சென்றார். மாலை 4.45 மணி அளவில் தேரி மணலில் வைத்து இருந்த கள்ளர் என்ற இளநீரை பூசாரி அரிவாளால் வெட்டினார்.

புனிதமணல் எடுப்பு

தொடர்ந்து கள்ளர் வெட்டு நிகழ்ச்சியைக் காண கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்களும், இளநீர் தெறித்த புனித மணலை போட்டி போட்டு அள்ளிச் சென்றனர். பக்தர்கள் புனித மணலை தங்களது வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபடுவார்கள். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும்போது புனித மணலை பயன்படுத்துவார்கள். விவசாய பணிகளை தொடங்கும்போது புனித மணலை வயலில் தூவுவார்கள். உடல்நலம் குன்றியவர்களின் மீது புனித மணலை தண்ணீரில் கரைத்து பூசுவார்கள். பணப்பெட்டியிலும் புனித மணலை வைப்பார்கள்.

ஏற்பாடுகள்

விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோவிலுக்கு வந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடந்த 2 நாட்களாக கோவில் வளாகத்தில் தங்கியிருந்து வழிபட்டனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. திருச்செந்தூரில் இருந்து தேரிக்குடியிருப்புக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராமராஜன் (திருச்செந்தூர்), மாதவன் (ஸ்ரீவைகுண்டம்) ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், உதவி ஆணையர் அன்னக்கொடி, கோவில் தக்கார் விசுவநாத், செயல் அலுவலர் இசக்கியப்பன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்