காலி தண்ணீர் கேன் மூலம் நவீன கழிப்பிடம் தயார் செய்து அசத்திய அரசு பள்ளி மாணவர்கள் போட்டியில், இந்திய அளவில் 5–ம் இடத்தை பிடித்து சாதனை

காலி தண்ணீர் கேன் மூலம் சிறுநீர் கழிப்பிடத்தை தயார் செய்து அரசு பள்ளி மாணவர்கள் அசத்தினர். அவர்களுடைய இந்த திட்டம், அகில இந்திய அளவில் நடைபெற்ற போட்டியில் 5–ம் இடத்தை பிடித்தது. வகுப்பறையில் துர்நாற்றம் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆலத்தூர் அரு

Update: 2016-12-15 22:45 GMT

வையம்பட்டி,

காலி தண்ணீர் கேன் மூலம் சிறுநீர் கழிப்பிடத்தை தயார் செய்து அரசு பள்ளி மாணவர்கள் அசத்தினர். அவர்களுடைய இந்த திட்டம், அகில இந்திய அளவில் நடைபெற்ற போட்டியில் 5–ம் இடத்தை பிடித்தது.

வகுப்பறையில் துர்நாற்றம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆலத்தூர் அருகே ஆ.குறும்பபட்டி உள்ளது. குறைந்த அளவே குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் குறும்பபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் உள்ள வகுப்பறையில் துர்நாற்றம் வீசியது. இதனால் வகுப்பறையில் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்துடன் இருந்தனர்.

இதையடுத்து பள்ளி மாணவ, மாணவிகள் இதுதொடர்பாக ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இடைநிலை ஆசிரியர் கேசவன், பள்ளி வகுப்பறையில் துர்நாற்றம் வீசுவதற்கான காரணத்தை கண்டறிய பள்ளி மாணவர் சுபிக் பாண்டியன் தலைமையில் சந்தோஷ், ராகுல், தயாநிதி, பிரபாகரன் ஆகியோர் கொண்ட குழு அமைத்து, இது குறித்து ஆய்வு நடத்தும்படி கூறினார். மாணவர்கள் ஆய்வு செய்தபோது, சிறுநீர் கழித்து விட்டு வரும் மாணவர்களின் கால் மற்றும் உடை, காலணி ஆகியவற்றில் சிறுநீர் துளிகள் இருப்பதால் தான், வகுப்பறைக்குள் துர்நாற்றம் வீசியது தெரியவந்தது. இது பற்றி அவர்கள் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.

காலி கேன் மூலம்

இந்நிலையில் மாணவர்கள் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் கேனில் ஏற்கனவே முரம், குப்பை தொட்டி உள்ளிட்டவை செய்திருந்தனர். இதில் முறத்திற்காக அந்த கேனை வெட்டிவிட்டு, அதை தலைகீழாக திருப்பி பார்த்தபோது சிறுநீர் கழிக்கும் பீங்கான் போன்று இருந்துள்ளது. அவற்றை கொண்டு கழிப்பிடம் அமைப்பது தொடர்பாக மாணவர்கள், ஆசிரியரிடம் கூறினர். அவர் சம்மதம் தெரிவித்ததைதொடர்ந்து, மாணவர்கள் 4 காலி பிளாஸ்டிக் கேன்களை அளவாக வெட்டி, அதை தலைகீழாக வைத்து தங்கள் பள்ளி கழிவறையில் பயன்படுத்தி பாதுகாப்பான சிறுநீர் கழிக்கும் இடமாக மாற்றிட முடிவு செய்தனர்.

இதற்கு குழாய் வாங்கிட மட்டும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடம் சிறிய அளவிலான தொகையை பெற்றனர். இதைத்தொடர்ந்து மிகவும் அசுத்தமாக இருந்த சிறுநீர் கழிப்பிடத்தை சுத்தம் செய்து, அதற்கு பெயிண்ட் அடித்து, தாங்கள் கேனில் தயாரித்து வைத்திருந்த சிறுநீர் கழிக்கும் பீங்கான் போன்ற பொருளுக்கு வண்ணம் பூசி, அதை மாணவர்களின் உயரத்திற்கு தகுந்தாற்போல் சுவற்றில் பொருந்தினர். அதற்கு சொட்டு நீர் பாசனம் போல் குழாயில் தண்ணீர் செல்லும் வகையில் ஏற்பாடும் செய்தனர்.

இந்திய அளவில் 5–ம் இடம்

இந்த கழிப்பிடத்தால், மாணவர்கள் சிரமமின்றி சிறுநீர் கழித்து செல்லும் நிலை இருந்ததோடு, துர்நாற்றமும் வீசவில்லை. மேலும் மாணவர்கள் தாங்கள் செய்த இந்த முறையை, ஒரு திட்டமாக தயாரித்து அகில இந்திய அளவில் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய போட்டிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அதற்கான பயிற்சியும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது. பயிற்சியில் அளிக்கப்பட்டது போன்று திட்டத்தை தயார் செய்து அனுப்பிய வகையில் 100 பள்ளிகள் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டன.

அதில் ஆ.குறும்பபட்டி அரசு நடுநிலைப்பள்ளியும் தேர்வாகி இருந்தது. இதையடுத்து பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு ஒரு மாணவர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஆகிய இருவரை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தனர். அங்கு சென்ற பின்னர் தான் ஆ.குறும்பபட்டி மாணவர்கள் உருவாக்கிய திட்டம் இந்திய அளவில் 5–ம் இடமும், தமிழக அளவில் முதலிடத்தை பிடித்ததும் தெரியவந்தது. மேலும் தமிழக அளவில் வெற்றி பெற்ற அரசு பள்ளியும் இதுதான். இந்த பள்ளியில் சிறந்த முறையில் யோசித்து இதுபோன்ற திட்டத்தை உருவாக்கிய பள்ளியின் தலைமை ஆசிரியை ஜோஸ்பின் மேரி, இடைநிலை ஆசிரியர் கேசவன் மற்றும் சுபிக் பாண்டியன் தலைமையிலான மாணவர்களுக்கு, அந்த கிராம மக்களும், கல்வித்துறை அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்