ஈரோடு ரெயில் நிலைய டிக்கெட் முன்பதிவு மையத்தில் ‘சுவைப் கருவி’ மூலம் கட்டணம் பெறும் வசதி

ஈரோடு ரெயில் நிலைய டிக்கெட் முன்பதிவு மையத்தில் ‘சுவைப் கருவி’ மூலம் கட்டணம் பெறும் வசதி

Update: 2016-12-15 22:45 GMT
ஈரோடு,

ஈரோடு ரெயில் நிலைய டிக்கெட் முன்பதிவு மையத்தில் ‘சுவைப் கருவி’ மூலம் டிக்கெட் கட்டணம் பெறும் வசதி செய்யப்பட்டு உள்ளது.

‘சுவைப் கருவி’

ரொக்கமில்லா பரிவர்த்தனை திட்டத்துக்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் முதல் கட்டமாக உயர் மதிப்புள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் பணப்புழக்கம் பெருமளவு குறைந்தது. இந்த நிலையை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் வரவு செலவு கணக்குகளை வங்கி கடன் அட்டை மற்றும் பணமெடுக்கும் அட்டைகள் மூலம் பரிவர்த்தனை செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. செல்போன், கணினி மற்றும் வங்கி அட்டை உரசும் கருவி (சுவைப் கருவி) மூலம் பரிவர்த்தனைகள் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் முன்பதிவு பயணச்சீட்டுக்கு ‘சுவைப் கருவி’ மூலம் பணம் செலுத்தும் வசதி உருவாக்கப்பட்டு உள்ளது.

பயணிகள் ஆர்வம்

இதனால் ரொக்கப்பணம் இல்லாத பயணிகள் சிரமமின்றி சுவைப் கருவிகளில் தங்கள் வங்கி அட்டைகளை உரசி கட்டணத்தை செலுத்த முடியும்.

இந்த கருவிகள் ஈரோடு ரெயில் நிலைய முன்பதிவு மையத்தில் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து ரொக்கப்பணம் இல்லாத பயணிகள் தங்கள் வங்கி அட்டைகளை கொடுத்து கட்டணம் செலுத்தினார்கள்.

இதுபற்றி ரெயில்வே முன்பதிவு மைய அதிகாரி கூறும்போது, ‘ஏற்கனவே முன்பதிவு மையத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு ‘சுவைப் கருவி’ வழங்கப்பட்டது. ஆனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால் யாரும் வங்கி அட்டை மூலம் கட்டணம் செலுத்த முன்வரவில்லை.

தற்போது ரொக்கப்பணம் எடுக்க முடியாதவர்கள் ஆர்வத்துடன் வந்து வங்கி அட்டையில் இருந்து சுவைப் செய்து கட்டணம் செலுத்துகிறார்கள். இது காசாளர்களுக்கு வசதியாக உள்ளது.

ரூபாய் நோட்டுகள் வாங்குவதில் உள்ள சிரமங்கள் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் ‘சுவைப் கருவி’ மூலம் ரெயில் முன்பதிவு கட்டணம் செலுத்த முன்வரவேண்டும்’ என்றார்.

மேலும் செய்திகள்