வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க கடன் பெறலாம் கலெக்டர் நிர்மல்ராஜ் தகவல்

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க கடன் பெறலாம் என கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– கடன் வழங்க இலக்கு குறு, சிறு மற்றும் தொழில் நிறுவனங்களின் துறை கொள்கை 2008–ன் கீழ் படித்த வேலை வா

Update: 2016-12-15 22:37 GMT

திருவாரூர்,

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க கடன் பெறலாம் என கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கடன் வழங்க இலக்கு

குறு, சிறு மற்றும் தொழில் நிறுவனங்களின் துறை கொள்கை 2008–ன் கீழ் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கும், சமூகத்தில் பின் தங்கியுள்ள மக்களுக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கும் நோக்குடன் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் நடப்பு நிதியாண்டில் 67 பேருக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பயன்பெற குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1½ லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி நிறுவனங்களுக்கு தற்போது அதிகபட்ச தொழில் கடனாக உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் மானிய தொகை அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்படும். சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.3 லட்சமும், வியாபாரத்திற்கு ரூ.1 லட்சமும் வங்கிகள் மூலமாக 25 சதவீத மானியத்துடன் கடனாக வழங்கப்படுகிறது.

விண்ணப்பங்கள்

மேலும் வாகனக்கடன், நேரடி விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற இயலாது. தொழில் தொடங்க விரும்புபவர்கள் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், திருவாரூர் என்ற முகவரியில் அலுவலக நாட்களில் இலவசமாக விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. இதனை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்