அரியலூர் மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்களில் புகையிலை– காலாவதி தேதி குறிப்பிடாத பொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாத பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடைகள்–நிறுவனங்களில் ஆய்வு அரியலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் உத்தரவுப்படி அர

Update: 2016-12-16 22:30 GMT

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாத பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடைகள்–நிறுவனங்களில் ஆய்வு

அரியலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் உத்தரவுப்படி அரியலூர் பஸ் நிலையம், மார்க்கெட் தெரு, சத்திரம், தேரடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் சுகாதாரத்துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் மோகன் முன்னிலையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை உள்ளிட்ட முக்கியமான இடங்களுக்கு அருகில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், சிகரெட் பாக்கெட்டுகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்தினர். இதில் கல்வி நிறுவனம் அருகில் உள்ள சில கடைகளில் விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், சிகரெட் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடுக்கும் வகையில் அனைத்து கடைகள், நிறுவனங்களிலும் புகையிலை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை பார்வைக்கு வைக்க வேண்டும் என்று அதன் உரிமையாளர்களிடம் அதிகாரிகள் எடுத்து கூறினர். அரசு உத்தரவை கண்டுகொள்ளாமல் விழிப்புணர்வு பலகைகள் வைக்காத கடைகள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர். அரியலூரில் பொது இடங்களில் புகை பிடிக்கக்கூடாது என்ற விழிப்புணர்வு பலகை வைக்காத 14 கடைகளுக்கு ரூ.1,900 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் வகீல், ரெங்கநாதன், செல்வராஜ், ஆனந்த், சதீஷ்குமார், மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

சாயம் ஏற்றப்பட்ட பட்டாணி

இதேபோல் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் கடைகள், நிறுவனங்கள், ஓட்டல்களில் நேற்று உணவு பாதுகாப்புதுறை மற்றும் சுகாதார துறையினர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளில் இருந்த குளிர்பானங்கள், பிஸ்கெட்– ரொட்டி பாக்கெட்டுகள் மற்றும் உணவு பொருட்கள் காலாவதியாகாமல் உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். டீக்கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்தும் சோதித்து பார்த்தனர்.

ஆய்வின் போது கடைகளில் இருந்த காலாவதி தேதி குறிப்பிடாத பிஸ்கட், மிட்டாய், தின்பண்டங்கள், சாயம் ஏற்றப்பட்ட பட்டாணி மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றை சோதனை குழுவினர் பறிமுதல் செய்தனர். மேலும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை காட்டு பகுதியில் கொட்டி அழித்தனர். ஆய்வில் சுகாதார துறை வட்டார மருத்துவ அலுவலர் லட்சுமீதரன் தலைமையில் டாக்டர் சந்திரசேகர், சுகாதார ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு, வேல்முருகன், பிரவீன்குமார், சிவா, தமிழரசன், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சிவக்குமார் ஆகியோர் குழுக்களாக பிரிந்து ஈடுபட்டனர். மேலும் இதுபோன்ற சோதனைகள் தொடரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்