லால்குடியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி அலுவலகத்தில் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் வளாகத்திலேயே சமைத்து சாப்பிட்டனர்

லால்குடியில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், சாலை பணியாளர்கள் காத்திருப்பு தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அந்த வளாகத்திலேயே சமைத்து சாப்பிட்டு, போராட்டத்தை தொடர்ந்தனர். காத்திருப்பு தொடர் முழக்க போராட்டம் திருச்ச

Update: 2016-12-16 22:45 GMT

லால்குடி,

லால்குடியில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், சாலை பணியாளர்கள் காத்திருப்பு தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அந்த வளாகத்திலேயே சமைத்து சாப்பிட்டு, போராட்டத்தை தொடர்ந்தனர்.

காத்திருப்பு தொடர் முழக்க போராட்டம்

திருச்சி மாவட்டம் லால்குடியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், உட்கோட்ட தலைவர் தங்கவேல் தலைமையில் காத்திருப்பு தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2 நபர்கள் வீதம் சாலை தொகுதி நிர்ணயம் செய்ய வேண்டும். பொது சேம நல நிதி கணக்கில் இருந்து முன் பணம் கேட்கும் பணியாளர்களுக்கு 3 மாதத்திற்கு தாமதம் ஆகாமல் முன் பணம் கொடுக்க வேண்டும். விடுப்பு கால பயணச்செலவை வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் மாநில செயலாளர் மகேந்திரன், மாநில தலைவர் அம்சராஜ், மாநில பொது செயலாளர் பாலசுப்ரமணியன், பொருளாளர் தமிழ், மாவட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் மலர்மன்னன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் லெட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டு அலுவலகத்தின் முன் பகுதியில் தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

வாக்குவாதம்

இது பற்றி தகவல் அறிந்த லால்குடி போலீசார் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் அங்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகுமாறு கூறினர். இதனால் பணியாளர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு சமையல் செய்ய தொடங்கினர். இதையடுத்து போலீசார் அவர்களிடம், பொது இடத்தில் சமையல் செய்யக்கூடாது என்று கூறியதை தொடர்ந்து, நெடுஞ்சாலை துறை அலுவலக வளாகத்தில் வைத்து சமைத்து, மதிய உணவு சாப்பிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு வரை இந்த போராட்டம் தொடர்ந்தது.இரவில் லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து இரவில் சாலை பணியாளர்கள் அங்கேயே உப்புமாக சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.

மேலும் செய்திகள்